பினாங்கில் எந்தத் தரப்பினரும் புரக்கணிக்கப்படமாட்டர்- முதலமைச்சர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில ஒற்றுமை அரசு  இந்திய சமூகம் உட்பட அனைத்து சமூகத்திற்கும்  அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் தொடர்ந்து அதிகாரம் அளிக்கும்.

 

மேலும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் சாவ் கொன் இயோவ், பினாங்கு தொலைநோக்குப் பார்வையான பினாங்கு2030 இலக்கினை அடைய மாநில அரசின் உறுதிப்பாட்டிலிருந்து எந்தக் கட்சியும் விலகியோ அல்லது புறக்கணிக்கவோ கூடாது என்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கை என்று சூளுரைத்தார்.

 

“நவம்பர் 10-ம் தேதி எனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் நான் கூறியது போல், 2009 ஆம் ஆண்டு முதல் ஆண்டு பட்ஜெட் மூலம் தமிழ்ப் பள்ளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் நாட்டிலேயே முதல் மாநிலம் பினாங்கு ஆகும்.

 

“பினாங்கு2030 இலக்கின் கீழ் இந்திய சமூகத்தினருக்காக பிரத்தியேகமாக கல்வி, உள்கட்டமைப்பு, மருத்துவ செலவினம் மற்றும் சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய  சிறப்புத் திட்டம் அல்லது திட்டத்தை செயல்படுத்த பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு (HEB) ஆண்டுக்கு ரிம2 மில்லியனாக  மானிய ஒதுக்கீட்டை அதிகரிக்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது”, என சாவ் மாநில அரசின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பேசுகையில் குறிப்பிட்டார்.

 

கடந்த அக்டோபர் 15 அன்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மூலம்  264 இந்திய மாணவர்களுக்கு ‘ஒருமுறை’ கல்வி உதவித்தொகை வழங்கியதை  நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தொலைதொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் தெரிவித்தார்.

 

“அண்மையில் வழங்கப்பட்ட இந்த உதவிகள் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்,” என்று சாவ் குறிப்பிட்டார்.

 

இன்றைய நிகழ்ச்சி   பினாங்கு மாநில ஆளுநர் துன் அஹ்மத் புசி அப்துல் ரசாக் மற்றும் அவரது மனைவி தோஹ் புவான் கதீஜா முகமது நீர் ஆகியோரின் வருகையால் மெருகூட்டப்பட்டது.

 

மேலும், பினாங்கு மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங்; மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலத் துறைத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.