பினாங்கு கபடி விளையாட்டு முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து ஆதரவு – செனட்டர்

Admin
img 20240601 wa0151

பத்து உபான் – “கபடி தமிழர்களின் பண்டையக் கால பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டின் மாண்பினைப் பறைச்சாற்றும் வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு மாநில அரசு மற்றும்
பினாங்கு மாநில விளையாட்டுக் கவுன்சில்(எம்.எஸ்.என்) ஆதரவுடன் எம்.எஸ்.என் தளத்தில் கபடி மைதானம் அமைக்கப்பட்டது.

“பினாங்கு விளையாட்டாளர்கள் கபடி போட்டியில் சிறந்து விளங்க கபடி ஆடுகளம் அமைக்க ரிம3000 மானியம் வழங்கப்பட்டது,” என்று செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் கபடி ஆடுகளம் அமைக்கும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

screenshot 20240601 194614 chrome
செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன்.

திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள கபடி ஆடுகளத்தைப் பராமரிக்கக் கூரை அமைக்க முன்மொழியப்பட்ட பினாங்கு கபடி சங்கத்தின் பரிந்துரைக்கு செனட்டர் ஆதரவுத் தெரிவித்தார்.

இந்தக் கபடி ஆடுகளத்தில் கூரை அமைக்கும் திட்டத்திற்கு ஏறக்குறைய ரிம200,000 செலவாகும் என அறியப்படுகிறது. இத்திட்டத்திற்கு தொடக்க ஆதரவு அளிக்கும் வகையில் எதிர்காலத்தில் ரிம10,000 மானியம் வழங்குவதாக செனட்டர் அறிவித்தார்.

screenshot 20240601 194506 whatsapp
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன்.

இந்தக் கபடி ஆடுகளத்தில் கூரை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில
இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஸி சென் மற்றும் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடல் நடத்த இணக்கம் கொண்டுள்ளதாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் தெரிவித்தார்.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் சரவாக் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சுக்மா போட்டியில் பினாங்கு கபடி குழுவினர் தங்கப் பதக்கம் வெற்றிப் பெற சட்டமன்ற உறுப்பினர் குமரன் நல்வாழ்த்துகள் தெரிவித்தார்.

img 20240601 wa0100
பினாங்கு கபடி குழு சரவாக் மாநிலத்தில் நடைபெற்ற 3 ஸ்டார் தேசியக் கபடி போட்டியில் ஆண்களுக்கானப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

“பினாங்கு கபடி குழுவினர் இந்த ஆடுகளம் அமைப்பதற்கு முன்னதாக டேக்வாண்டா மற்றும் கராத்தே விளையாட்டுக் குழுவினர்களிடம் இருந்து பயிற்சி தலத்தை இரவல் பெற்று பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

“தற்போது கபடி ஆடுகளம் அமைத்ததன் மூலம் பினாங்கு கபடி குழுவினர் அதிகமாகப் பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். இதன் மூலம், வலிமையான மற்றும் திறன்மிக்க விளையாட்டுக் குழுவை உருவாக்க அடித்தளமாக அமையும்,” என்று பினாங்கு கபடி சங்க ஆலோசகரும் பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஆணையருமான டத்தோ தினகரன் இதனைத் தெரிவித்தார்.

img 20240601 wa0093
பினாங்கு கபடி குழு 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் யுவதி கபடிப் போட்டியில்
பெண்களுக்கானப் பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்றனர்.
.

இந்தக் கபடி ஆடுகளம் அமைக்க பினாங்கு மாநில விளையாட்டுக் கவுன்சில்(எம்.எஸ்.என்) ரிம10,000; செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ரிம3,000; ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு ரிம1,000; டத்தோ தினகரன் ரிம1,000; பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ரிம500; டத்தோ பாலா ரிம500 மற்றும் பினாங்கு கபடி சங்க செயற்குழு உறுப்பினர்களும் மானியம் வழங்கியதாக அச்சங்கத்தின் தலைவர் க.அர்ஜுனன் கூறினார்.

பினாங்கு கபடிக் குழுவின் முன்னேற்றத்திற்கு உதவிக்கரம் நீட்டி வரும் அனைத்து தரப்பினருக்குன் நன்றிக் கூறினார்.

img 20240601 wa0075
புதியதாக அமைக்கப்பட்ட கபடி ஆடுகளத்தில் கபடி விளையாட்டாளர்கள் பயிற்சி மேற்கொள்வதைப் படத்தில் காணலாம்.

பினாங்கு கபடி குழுவினர் கடந்த 2011 ஆண்டு நடைபெற்ற சுக்மா போட்டியில் பெண்களுக்கானப் பிரிவில் வெங்கலம் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

அண்மையில், சரவாக் மாநிலத்தில் நடைபெற்ற 3 ஸ்டார் தேசியக் கபடி போட்டியில் ஆண்களுக்கானப் பிரிவில் வெண்கலப் பதக்கமும், 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் யுவதி கபடிப் போட்டியில்
பெண்களுக்கானப் பிரிவில் வெண்கலம் பதக்கமும் வென்று வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர், என்று பினாங்கு கபடி சங்கச் செயலாளர் சங்கர் கூறினார்.