புலாவ் பூரோங்கில் மிக நவீன திடக்கழிவு மேலாண்மை முறை பயன்படுத்தப்படும் – ஜெக்டிப்

Admin

 

ஜார்ச்டவுன் – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) 2022 ஆகஸ்ட்,1 முதல், புலாவ் பூரோங் குப்பைக் கிடங்கு தளத்தின் 100 சதவீத திடக்கழிவு மேலாண்மையை பகுதி 1, பிரிவு 3 அரசு சாரா நிறுவனத்திடம் இருந்து எடுத்துக்கொண்டது. இத்தளத்தை 2024-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தலாம்.

மாநில அரசு வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருந்து மிக நவீன திடக்கழிவு மேலாண்மை முறையை, இக்குப்பைக் கிடங்கின் பகுதி 2 இல் செயல்படுத்தப்படும், என்று ஜெக்டிப் கூறினார்.

“பினாங்கு மாநில உள்ளாட்சிப் பிரிவு, புலாவ் பூரோங் பகுதி 2 கழிவுகளை அகற்றும் தளத்தின் மேலாண்மைக்கு கிட்டத்தட்ட ரிம46.5 மில்லியன் நிதித் தேவைப்படுகிறது. இது 12 மாதங்களில் செயல்படுத்தப்படும்.

“மாநில அரசு குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மையை நிர்வகிக்கப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்புகிறது,” என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ லாவ் சூ கியாங் அவர்களின் வாய்மொழி கேள்விபதில் அமர்வின் போது ஜெக்டிப் இவ்வாறு விளக்கமளித்தார்.

கூடுதலாக, டத்தோ கெராமாட் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜெக்டிப், குப்பைக் கிடங்கின் பகுதி 2-க்கான RFP இந்த ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்படும் என்று கூறினார். இதனை மாநில அரசு மட்டத்தில் இறுதி செய்யப்படுவதற்கு சுமார் 12 மாதங்கள் ஆகும்.

ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் ஹெங் மொய் லாய், புலாவ் பூரோங் குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் உள்ளூர் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பினாங்கு மாநில உள்ளாட்சிப் பிரிவு மட்டத்தில் தற்செயல் திட்டம் குறித்து மேலும் தெளிவுபடுத்துமாறு ஜெக்டிப் அவர்களிடம் கூடுதல் கேள்வி பதில் அமர்வில், கேட்டுக் கொண்டார்.

“புலாவ் பூரோங் குப்பைக் கிடங்கில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், ஊராட்சி மன்றம் சேகரிக்கும் ‘டிப்பிங் கட்டணம்’ அதன் குப்பைக் கிடங்கில் உள்ள அனைத்து நிர்வாகச் செலவுகளையும் ஈடுசெய்ய முடியுமா?,” என்று மொய் லாய் கேள்வி எழுப்பினார்.

கேள்விக்குப் பதிலளித்த ஜெக்டிப், பினாங்கு மாநில உள்ளாட்சிப் பிரிவு, தற்போதுள்ள தொடர்புடைய சட்ட விதிகளின் அடிப்படையில் மிக நவீன திடக்கழிவு மேலாண்மை அமைப்புக்கான RFP-ஐ செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும், என்றார்.

“இந்த RFP மிகவும் முக்கியமானது; சட்ட விதிகளின் அடிப்படையில் RFP-ஐ இறுதிச் செய்யும் செயல்முறையை நாங்கள் ஆராய்வோம்,” என்று அவர் மீண்டும் பதிலளித்தார்.