மாசி மகத் தெப்ப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை

95fcc0ae 44fd 4810 8781 1d4b817be461

 

ஜார்ச்டவுன் – ஸ்ரீ சிங்கமுகக் காளியம்மன் கோவிலின் வருடாந்திர மாசி மகத் தெப்ப திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்ய பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) உதவ முன்வந்துள்ளது.

தெலுக் பஹாங்கில் உள்ள ஸ்ரீ சிங்கமுகக் காளியம்மன் கோயிலில் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6.00 மணி முதல் இவ்விழா தொடங்கப்படும்.

PHEB ஆணையரும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான குமரன், இந்த ஆண்டு, இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆலயத்திற்கு வருகையளிப்பதற்கு ரேபிட்பினாங்கின் இலவச பேருந்து சேவை வழங்கப்படுகிறது என்று அறிவித்தார்.

திருவிழாவின் போது பக்தர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன நிறுத்துமிடம் தொடர்பான இடப் பிரச்சனைக்குத் தீர்வுக் காணவும் இந்தச் சேவை அறிமுகம் காண்கிறது என குமரன் கூறினார்.

“பினாங்கு இந்து அறப்பணி வாரியம் பக்தர்களின் வசதியை மேம்படுத்த உதவும் பேருந்து சேவைக்காக ரிம4,823-ஐ பங்களித்து ஆதரவை வழங்குகிறது.

“30 நிமிட இடைவெளியில் மொத்தம் ஐந்து பேருந்துகள் இயக்கப்படும்.

“இந்தச் சேவையானது தஞ்சோங் பூங்கா மார்க்கெட்டில் உள்ள ‘pick-up point’ நிலையத்தில் இருந்து மாலை 4.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை வழங்கப்படும்,” என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கமளித்தார்.

இந்த இலவசப் பேருந்து சேவையைப் பயன்படுத்தி பக்தர்கள் நன்மை பெற வேண்டும். இந்த சேவைக்காக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ரிம4,823-ஐ ஆலயத் தலைவர் கணபதியிடம் வழங்கியது என அவர் மேலும் கூறினார்.

127 ஆண்டுகளாக தொடர்ந்து இடைவிடாமல் நடைபெறும் இந்த திருவிழாவில் மாலை 6.30க்கு சிறப்பு பூஜை நடைபெறும். மாலையில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப ஊர்வலம் தொடங்கும் போது சிங்கமுகக் காளியம்மனின் திருவருளைப் பெறும் பொருட்டு பக்தர்கள் வேண்டுதல்கள் நிறைவேற மனமுருகி வேண்டி மிதவை விளக்குகளைக் கடலில் விட்டனர். சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என ஆலயத் தலைவர் கணபதி கேட்டுக் கொண்டார்.

மேலும் PHEB துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் மற்றும் ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலய ஆலோசகர் எம்.லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.