மாநிலத்தின் உணவுத் தொழிலான ஸ்மார்ட் விவசாய முதலீடுகளை வலுப்படுத்த வேண்டும்

Admin
20f01a93 7bf7 4954 a36b 8d6a1e98131d

செபராங் ஜெயா – இன்வெஸ்ட் பினாங்கு வாயிலாக பினாங்கு உணவுத் தொழில் மற்றும் வேளாண் தொழில்நுட்ப கழகம் நிறுவப்படுவது இத்துறைகளின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் அதே வேளையில் மாநிலத்திற்குக் கூடுதலான முதலீடுகளையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பினாங்கு உணவுத் தொழில் மற்றும் ஸ்மார்ட் விவசாயம் தொடர்பான நிலையான எதிர்கால மாநாட்டில் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.

“இன்வெஸ்ட் பினாங்கு மூலம் மாநில அரசு, மலேசிய தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (MIDA) மற்றும் மலேசிய டிஜிட்டல் பொருளாதாரம் கார்ப்பரேஷன் (MDEC) போன்ற நிறுவனங்களுடன் புதிய கூட்டாண்மைக்கு உறுதிபூண்டுள்ளது. உணவு தொழில்நுட்பத் தொழில் மற்றும் ஸ்மார்ட் விவசாயத்தில் மாற்றங்களை மேலும் துரிதப்படுத்துவதற்கு மற்ற தொழில் துறைகளிலும் பங்குதாரர்களும், முனைப்புக் காட்ட வேண்டும்.

“மாநில அரசு இன்வெஸ்ட் பினாங்கு மூலம் E&E (மின்சார மற்றும் மின்னணு) துறை, தொழில்நுட்பத் துறை மற்றும் உலகளாவிய வணிகச் சேவைகளின் முதலீடுகளில் அதிக கவனம் கொள்கிறது. எனினும், தற்போது உணவு உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நம்புகிறேன். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விவசாயத் துறையின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்த விவேகமான முறையில் உருவாக்க வேண்டும்,” என நிதி, நில மேம்பாடு & பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார்.

கூடுதலாக, உணவு மற்றும் விவசாயத் தொழிலை இலக்காகக் கொண்டு தேசிய வேளாண் உணவுக் கொள்கை 2021-2030 (NCP 2.0) ஐ அறிமுகப்படுத்திய புத்ரா ஜெயாவின் முயற்சியையும் சாவ் பாராட்டினார்.

மேலும், மத்திய அரசின் கொள்கைப்படி விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் ஆகிய மூன்று தொடர்புடைய துணைத் துறைகளில் உற்பத்தி விகிதத்தை இரட்டிப்பாக்க மாநில அரசு இணக்கம் கொண்டுள்ளது.

இது சம்பந்தமாக, பினாங்கு உணவுத் தொழில் மற்றும் வேளாண் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் இன்வெஸ்ட் பினாங்கு தலைமைச் செயல் அதிகாரி (CEO) டத்தோ லூ லீ லியான் இக்கழகத்தின் உறுப்பினர்களாக உள்ள சில தொழில்துறையுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று கொன் இயோவ் நம்பிக்கை தெரிவித்தார்.

அதில், ஃபெடரல் ஓட் மில்ஸ், மலேசிய உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு (எஃப்.எம்.எம்), கீ ஹியாங், ஜெயா சக்தி மசாலா தொழிற்சாலை நிறுவனம், டிராபிகல் கன்சோலிடேட்டட், என்சா ஜாடன், மற்றும் வைட்ராக்ஸ் அக்ரிடெக் ஆகியவை அடங்கும்.

அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கொன் இயோவ், மாநிலத்தில் விவசாய நோக்கங்களுக்காக தற்போதுள்ள நில வங்கியுடன் இணைந்து, புதிய முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று கூறினார்.

“இந்த விவேக விவசாயத்திற்கு உண்மையில் பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடு (நில வங்கி) தேவையில்லை, நீங்கள் வீடுகளில் கூட காய்கறிகளை வளர்க்கலாம்.

“அதிகமானோர் வீடுகள் அல்லது அலுவலகங்களில் பயிரிட்டால் அது நமது உணவு பாதுகாப்பை மேம்படுத்த முடியும்,” என்று மேலும் அவர் கூறினார்.

இதற்கிடையில், தொழில்நுட்பம், விவசாயம், உணவு பாதுகாப்பு & கூட்டுறவு மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் ஃபஹ்மி சய்னோல், கூறுகையில், விவசாயத் துறை மற்றும் மாநிலத்தின் உணவுத் துறையில் ஸ்மார்ட் நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கு அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

“ஸ்மார்ட் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் உணவுத் துறையில் முதலீட்டை உருவாக்க மாநில அரசு தனியார் துறையுடன் கூட்டு அணுகுமுறையை மேற்கொள்கிறது,” என்று பந்தாய் ஜெரஜாக் சட்டமன்ற உறுப்பினருமான
ஃபஹ்மி பதிலளித்தார்.

தொடர்புடைய வளர்ச்சியில், மாநிலத்தின் விவசாயத் துறைக்கான தரவு அமைப்பை மேம்படுத்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்திடம் இருந்து தனது தரப்பு கட்டாய ஒதுக்கீடுகளுக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்ததாகவும் ஃபஹ்மி விளக்கினார்.

“இந்த ஆண்டு பினாங்கு அந்த ஒதுக்கீட்டைப் பெறும் என்று நம்புகிறேன். இத்திட்டம் இவ்வாண்டில் செயல்படுத்தப்படும்,” என்றார்.

பினாங்கு மாநிலத்தின் விவசாய தரவு அமைப்பு மலேசிய புள்ளியியல் துறையுடன் (DOSM) ஒத்துழைப்பு மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.