ஜார்ச்டவுன் – வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) இணைந்து தீபாவளி ஒற்றுமை விருந்தோம்பல் நிகழ்ச்சியை
ஜாலான் பத்தானி, பினாங்கு மாநகர் கழக டர்ன்கி மண்டபத்தில் (எம்.பி.பி.பி) நடைபெற்றது.
இராயரின் கூற்றுப்படி, அரசியலில் ‘எதிரி’ கட்சிகளாக இருந்த இரு வெவ்வேறு கட்சிகள், மக்களின் நலனுக்காக சமரசமாக ஒன்றிணைந்து இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரலாறு படைத்துள்ளது, என்றார்.
இது ஒரு புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளது. முன்னதாக, நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பும் ஒற்றுமை விருந்தோம்பலாக நடத்தப்பட்டது. இம்முறை தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து மற்ற பண்டிகைகளும் இவ்வாறான ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்.
“மலேசியர்களிடையே இந்த ஒற்றுமை உணர்வை வளர்க்க விரும்புகிறோம், அரசாங்க மட்டத்தில் மட்டுமல்ல, மக்களை உள்ளடக்கிய அடிமட்ட மட்டத்திலும், பினாங்கு மற்றும் தேசிய ரீதியிலும் வெற்றியை எளிதாக்கப் பெற இது வழிவகுக்கும்” என்று இராயர் கூறினார்.
மேலும், சமூக மேம்பாடு, நலன் மற்றும் முஸ்லீம் அல்லாத ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம்; பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர், ஓங் ஆ தியோங்; பாகான் நாடாளுமன்ற உறுப்பினர், லிம் குவான் எங் மற்றும் பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜே. தினகரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.