பினாங்கு இந்துதர்ம மாமன்ற சமூகநல திட்டம் தொடரட்டும் – சுந்தராஜு

ஜார்ச்டவுன் – கடந்த 22 ஆண்டுகளாக பினாங்கில் சமூக நற்பணிகள் ஆற்றி வரும் மலேசிய இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையம், ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகையின் போதும் சமூகநலன் சார்ந்த உதவிகளை வழங்க தவறியது இல்லை என்று இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையத்தின் தலைவர் ந.தனபாலன் தெரிவித்தார்.

மலேசிய இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையம், பினாங்கு ஆளுநர் அறக்கட்டளை மற்றும் பிறை சட்டமன்ற தொகுதியின் இணை ஏற்பாட்டில் பினாங்கு பொது மருத்துவமனையில் இன்று தீபாவளிப் பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பினாங்கு பொது மருத்துவமனையில் பணிப்புரியும் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு என சுமார் 800 தீபாவளிப் பரிசுக்கூடைகளை வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சுழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ சுந்தராஜு மற்றும் பினாங்கு ஆளுநர் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஶ்ரீ ஹஜி ரோசாலி எடுத்து வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ சுந்தராஜு இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையத்தின் சமூகநலத் திட்டங்களைப் பாராட்டினார்.

மேலும், இவர்களின் சமூக சேவைகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டு அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நாட்டில் இயங்கும் சமயச் சார்புடைய இயக்கங்கள் சமயம் சார்ந்த பண்டிகைகள் நடத்த இணக்கம் கொள்ள வேண்டும். அதே வேளையில், சமூக சேவையும் ஆற்ற முனைப்புக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இத்திட்டம் வெற்றிகரமாக வழி நடத்த நிதியுதவியும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுவதுடன், மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளும் இந்தப் பண்டிகை கொண்டாட்டத்தில் மகிழ்சியடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பினாங்கு இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையம் ஏற்பாட்டில் தீபாவளிப் பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சியை நடத்துவதாக இம்மன்றத் தலைவர் ந.தனபாலன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பினாங்கு ஆளுநர் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரியான டத்தோஶ்ரீ ஹஜி ரோசாலி பினாங்கு இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இன மத பேதமின்றி பரிசுச்கூடை வழங்குவதுபோல், பினாங்கில் உள்ள பிற அரசு சாரா இயக்கங்களும் தங்களின் இயக்கங்களின் மூலம் சமூகத் தொண்டுகள் ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பினாங்கு இந்துதர்ம மாமன்றத்தின் இந்த முயற்சிக்குப் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து, இந்துதர்ம மாமன்றம் வசதி குறைந்தவர்கள்,கருணை இல்லங்கள், தனித்துவாழும் தாய்மார்களுக்குப் புத்தாடை மற்றும் பலகாரப் பொருட்கள் வழங்குதல் போன்ற நற்சேவைகளையும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வழிநடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சக மனிதர்கள் போலவே இவர்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இப்பரிசுகள் வழங்கப்படுவதாக அருள் நிலையத்தின் தலைவர் ந.தனபாலன் கூறினார். மேலும், இம்மாமன்றம் ஏற்பாட்டில் ‘வாழ்வில் ஒளியேற்றுவோம்’ எனும் இத்திட்டம் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.