இரத்த தானம் விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்ற வித்திடும்- தர்மன்

 

ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா இளைஞர் பகுதி ஏற்பாட்டில்   சுவாமி விவேகானந்தா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினை ஆட்சிக்குழு உறுப்பினர் அஃபீப் பஹாருடின் பிரதிநிதியாக மாநகர் கழக உறுப்பினர் ஹரி கிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

“மலேசிய இந்து சங்க ஏற்பாட்டில்  இத்திட்டம் நாடு தழுவிய நிலையில் 54 வட்டாரப் பேரவைகளில் ஒரு மாத காலவரையறையில் நடத்தப்படுகிறது. மலேசிய இந்து சங்கம்  இத்திட்டத்தின் மூலம் 3,000 யூனிட் இரத்த தானம் பெற இலக்கு கொண்டுள்ளது,” என தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் தர்மன் கூறினார்.

இந்த முகாமில் இரத்த தானம் மட்டுமின்றி உடல் உறுப்பு தானத்திற்கான பதிவும் இடம்பெற்றது. ஜெலுத்தோங், தெஸ்கோ பேரங்காடியில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறக்குறைய 73 பேர்கள் இரத்த தானமும் 23 பேர் உடல் உறுப்பு தானத்திற்கான பதிவும் செய்தனர்.

தானத்திலே சிறந்த தானம்  அன்னதானம் மற்றும் இரத்த தானமாகும். பொதுமக்கள் இடையே இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மேலோங்க இம்மாதிரியான முகாம்கள் வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

விழாக் காலங்களில் சாலை விபத்துகள் ஆங்காங்கே அதிகமாக நடைபெறுவதால் உயிர்களைக் காப்பாற்றும் முன்னேற்பாடாக இரத்த வங்கியை நிரப்பும் நோக்கத்தில் இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. மேலும், பொது மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் உடல் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இம்மாதிரியான நிகழ்வுகள் முன்னோடியாக அமையும் என மேலும் தெரிவித்தார்.

படம் 1: இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்த இளைஞர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.