பத்து காவான் – பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமுவின் முன்முயற்சியினால், அண்மையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட தர்ஷன் முருகன் மற்றும் கவர்ஜிதா முருகன் ஆகிய உடன் பிறப்புகளுக்குச் சொந்த வீடு வழங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரியில், தங்கள் பாட்டியுடன் பள்ளிக்குச் செல்லும் போது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இந்த பிள்ளைகளில், ஏழு வயதான தர்ஷன் இடது கை செயலிழப்பையும், அவரது தங்கை கவர்ஜிதா வலது காலை இழப்பையும் எதிர்கொண்டனர்.
இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, இக்குடும்பத்திற்கு பல்வேறு உதவிகளை செய்துக் கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு
சிறு வயதிலே அந்தப் பிள்ளைகள் எதிர்நோக்கும் உடல் நலப் பிரச்சனை மற்றும் அவர்களின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்த முன்னேற்பாடு செய்தார்.
முன்னதாக, பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுத் தலைவரான டத்தோ ஸ்ரீ சுந்தரராஜூவின் தலைமையில், சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் வாரியக் குழுவினர் இணைந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
“இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் நல்லுள்ளங்களிடமிருந்து 2025 ஆகஸ்ட்,19-ஆம் தேதி வரையில் ரிம222,024.41 நிதித் திரட்டப்பட்டது. அதில் ரிம42,500 மதிக்கதக்க முத்தியாரா இண்டா அடுக்குமாடி, பண்டார் தாசெக் முத்தியாராவில் அந்த இரு உடன் பிறந்தவர்களின் பெயரில் வாங்கப்பட்டது. மீதமுள்ள பணம் ‘அமானா ராயா’ எனும் அறங்காவலர் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, அந்தப் பிள்ளைகளுக்கு 18 வயது வரும் வரையில், அவர்களின் நலனுக்காக மாதந்தோறும் ரிம1,500 பாட்டியிடம் வழங்கப்படும்,” என்றார்.
“தற்போது அந்த இரு பேரப்பிள்ளைகளின் பாட்டியான அமிர்தம் முனுசாமி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடு, 18 வயதுக்குப் பிறகு அந்த பிள்ளைகளின் பெயரில் முழுமையாக மாற்றப்படும். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற வகையில், மாநில கல்வி இலாகா மற்றும் மாநில வீடமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் முழு ஒத்துழைப்போடும், ஆதரவோடும் இந்த உதவியை செய்து எனது கடமையை முழு மனதுடன் நிறைவேற்றினேன்,” என்று பிறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
மேலும், பினாங்கு மாநில அரசாங்கம் மற்றும் மாநில வீடமைப்பு மேம்பாட்டு வாரியம் பொது மக்களின் சமூக நல மேம்பாட்டிலும் அக்கறைக் கொண்டு செயல்படுவதாக அதன் வாரிய வியாபார பிரிவு தலைமை அதிகாரி ஹஜி ஃபக்ருஸி பின் இப்னு ஒமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்மிங்தோன் சென் பெர்ஹாட் மேம்பாட்டு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி லிம் பெங் ஹோ, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சந்திரவதனி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாதன் மற்றும் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி வாரியக் குழுத் தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.