மலேசிய இந்து சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான 47-வது திருமுறை ஓதும் விழாவில் பினாங்கு மாநிலப் பேரவை இரண்டாம் நிலையில் வெற்றிப் பெற்றது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டாம் நிலையில் இருந்து வெற்றி மகுடம் சூட விடா முயற்சியுடன் தனது மாநிலப் பேரவை முயற்சிப்பதாக அதன் மாநிலத் தலைவர் விவேக ரத்னா தர்மன் தெரிவித்தார்.

இத்திருமுறை ஓதும் விழாவில்
மாணவர்கள் தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், பேச்சுப் போட்டி, திருமுறை பதிகப் பாராயணம், பஞ்சபுராணம் என பல சமயப் போட்டிகளில் பினாங்கு மாநிலத்தைப் பிரதிநிதித்து வெற்றிப் பெற்றனர் என்று அகம் மகிழ தர்மன் முத்துச் செய்திகள் நாளிதழிடம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு விழாவில் 10 மாநிலங்களும் அழைப்பு முறையில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த விழா ஷா ஆலாமில் அமைந்துள்ள மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி அரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.
தேசிய அளவிலான திருமுறை ஓதும் போட்டியில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 100 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
“சமயக் கல்விக்கு அடித்தளமாக விளங்கும் தேவார வகுப்பில், குழந்தைகள் சிறுவயதிலிருந்தே பங்கேற்க வேண்டும். இந்த சமயக் கல்வி நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டியவையாகும் என்பதால், பெற்றோர்களின் பங்களிப்பு இங்கு மிக முக்கியமாக அமைகிறது.

“மாணவர்கள் சமய அறிவை வளர்ந்து கொள்ள, பெற்றோர்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும் அவசியமாகும். இத்தகைய கல்வி முயற்சிகள், மாணவர்களின் ஆன்மிக வளர்ச்சி மட்டுமின்றி ஒழுக்கமும் பண்பும் கொண்ட சமூகத்தை உருவாக்கவும் வழிவகுக்கும்,” என்று மாநிலப் பேரவைத் தலைவர் விவேக ரத்னா தர்மன் தெரிவித்தார்.
மேலும், மலேசிய இந்து சங்கத்தின் வருடாந்திர மெகா திட்டமாக திருமுறை ஓதும் விழா இடம்பெறுகிறது. இவ்விழா 47 ஆண்டுகள் தொடர்ச்சியாக வருடாந்திர நிகழ்ச்சியாக நடத்துவது எளிதான காரியம் அல்ல மாறாக இந்து சங்கத்தின் முன்னோடிகள் மற்றும் தலைவர்கள் பாராட்டபட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விழா வட்டாரத்தில் தொடங்கப்பட்டு மாநிலத்தைக் கடந்து இறுதியில் தேசிய அளவில் மிக சிறப்பாக ஏற்று நடத்தப்படுகிறது என்று தர்மன் விளக்கமளித்தார்.
எதிர்காலத்தில் இந்த திருமுறை ஓதும் விழா அனைத்துலக ரீதியில் நடத்த மலேசிய இந்து சங்கம் இணக்கம் கொண்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மாணவர்களிடையே சமயக் கல்வி தொடர்ந்து நிலைப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை ஏற்பாட்டில் 47 வது தேசிய திருப்புகழ் ஓதும் விழா வருகின்ற நவம்பர்,8 தேதி ஜாவி, செட்டியார் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெறும் என அறிவித்தார்.