தென் செபராங் பிறையில் புதிய நீர்த்தேக்கம் குளம் திறக்கப்பட்டது

Admin

அண்மையில் தென் செபராங் பிறையில் மூன்றாவது நீர்த்தேக்க குளம்(reservoir) பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களால் அதிகாரப்பூர்வ திறப்பு விழாக் கண்டது. இப்புதிய நீர்தேக்க குளம் தென் செபராங் பிறையில் வாழும் குடியிருப்பாளர்கள் 24 மணிநேரமும் நீர் வசதி பெறும் இலக்கில் கட்டப்பட்டது.
சமீபத்தில் பினாங்கு நீர் விநியோக வாரிய நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ள 2 நீர்த்தேக்க குளங்களுக்கு சுமார் ரிம16.69 கோடி செலவிடப்பட்டது என திறப்பு விழாவின் போது செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் அதன் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் டத்தோ ஜசானி மைடின்சா. தென் செபராங் பிறையில் தற்போது 62,000 பயனீட்டாளர்கள் ஒரு நாளுக்கு 86 கோடி லிட்டர் நீரை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நீர் பயன்படுத்தும் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் அவர்களின் நீர் தேவையைப் பூர்த்திச் செய்யும் நோக்கில் இப்புதிய நீர்த்தேக்க குளம் கட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பினாங்கு மாநில அரசு பெருநிலப்பகுதியை வளர்ச்சியடைந்த அறிவார்ந்த நகரமாக பிரகடனப்படுத்த இலக்கு கொண்டுள்ள வேளையில் அங்கு பல மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதை தமது உரையில் குறிப்பிட்டார் இரண்டாம் துணை முதல்வர். அப்பகுதியில் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதால் இப்புதிய குளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, நீர்க்குழாய் பழுதடைதல் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழும் போது 24 மணி நேரத்திற்கு இந்நீர்த்தேக்க குளம் மூலம் பொதுமக்கள் நீரை பயன்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தென் செபராங் பிறையில் புதிய நீர்த்தேக்க குளத்தை திறந்து வைத்தார் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி உடன் பொறியியலாளர் ஜசானி மைடின்சா.
தென் செபராங் பிறையில் புதிய நீர்த்தேக்க குளத்தை திறந்து வைத்தார் பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி உடன் பொறியியலாளர் ஜசானி மைடின்சா.