நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து நேதாஜி இராயர் விடுவிக்கப்பட்டார்.

வழக்கில் வெற்றிப்பெற்ற மகிழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் (உடன் மாநில முதல்வர் லிம் குவான் எங், நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் மற்றும் பூஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் டியோ)
வழக்கில் வெற்றிப்பெற்ற மகிழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் (உடன் மாநில முதல்வர் லிம் குவான் எங், நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் மற்றும் பூஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் டியோ)

ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் மீது சுமத்தப்பட்ட இரண்டு தேச நிந்தனைக் குற்றச்சாட்டுகளில் மற்றொரு குற்றச்சாட்டுலிருந்தும் பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார். மாநில சட்டமன்றத்தில் ‘அம்னோ செலாக்கா’ என்ற வார்த்தையை இராயர் உதிர்த்ததற்கான ஆதாரங்களை எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் போதுமான சான்றுகளுடன் உறுதிப்படுத்தத் தவறியதை சாதகமாகக் கொண்டு ஆர்.எஸ்.என் இராயர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின்போது ஆர்.எஸ்.என்.இராயர் மேற்கூறிய ‘செலாக்கா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதாக அவர் மீது பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் ஒஸ்மான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இக்குற்றம் குற்றவியல் பிரிவு 4(1) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு செவிமடுப்புக்கு பின் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நீதிபதி இப்ராஹிம் ஒஸ்மான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டப்பட்டவர் பயன்படுத்திய சொற்கள் நிந்தனைகுரிய சொல் என மெய்ப்பிக்க முடியவில்லை என நீதிபதி இப்ராஹிம் குறிப்பிட்டு விடுதலை செய்தார். இராயார் சார்பில் பூஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான கோபிந் சிங் ஆஜராகினார். விசாரணையைக் கண்கானிக்க பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் கலந்து கொண்டனர்.

இதனிடையே, தேர்தல் பிரச்சாரத்தின் போது அய்லன் கிளாட்ஸ் பகுதியில் உரையாற்றும் வேளையில் “அம்னோ சிலாகா” எனும் வார்த்தை உபயோகித்த தேச நிந்தனைக் குற்றஞ்சாட்டில் இருந்தும் ஆர்.எஸ்.என் இராயர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இராயர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபிந் சிங் டியோ எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் இதனை மேல்முறையீடு செய்வது தேவையற்ற செயல் என குறிப்பிட்டார். எவ்வாறாக இருப்பின் இறுதியில் வாய்மையே வெல்லும் என மேலும் சூளுரைத்தார்.