புக்கிட் தெங்கா – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மற்றும் ஜஸ்மின் உணவு நிறுவனம் இணைந்து, பில்லியன் கோத்தா பெர்மாய் பல்பொருள் பேரங்காடியில் அரிசி பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்யும் திட்டம் தொடக்க விழாக் கண்டது. இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு, பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் ஹெங் யே ஷியுவான், ஜஸ்மின் உணவு நிறுவனம் கிளை மேலாளர் ஓய் ஹூ ஜூ மற்றும் பில்லியன் கோத்தா பெர்மாய் கிளை மேலாளர் கே.எல் ஹாங் ஆகியோர் முன்னிலையில் தொடக்கி வைத்தனர்.
முன்னதாக தனது உரையில், இத்திட்டம் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சி திட்டங்களில் ஒன்றாகவும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் யே ஷியுவான் தெரிவித்தார்.
“இந்த பிளாஸ்டிக் அரிசி பை மறுசுழற்சி திட்டம் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் மறுசுழற்சி நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
யே ஷியுவானின் கூற்றுப்படி, கடந்த 2025, ஜூன்,22 அன்று புக்கிட் மெர்தாஜாம்,லோட்டஸ் பேரங்காடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 367 பிளாஸ்டிக் அரிசி பைகள் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் 2025, ஆகஸ்ட்,24 அன்று எகான்சேவ் ஜாவி பேரங்காடியில் நடந்த இரண்டாவது திட்டத்தில் 443 பிளாஸ்டிக் அரிசி பைகள் சேகரிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களாக மாற்றுவதற்காக, மறுசுழற்சி அமலாக்கம் முறை (upcycle) மூலம் பைகள் சமூகத்திற்கு விநியோகிக்கப்படுகின்றன என அறியப்படுகிறது.
அந்நிகழ்ச்சியில், யே ஷியுவான், ஸ்மார்ட் பயனீட்டாளர் 8R கொள்கைகளான மறுபரிசீலனை செய்தல், மறுபயன்பாடு, பழுதுபார்த்தல், பதிவு செய்தல், மீட்டெடுப்பது மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றை ஒரு நிலையான வாழ்க்கை முறையாகப் பின்பற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
இத்திட்டத்தில் பங்கேற்க இன்னும் பல உள்ளூர் சமூகங்கள் முன்வர வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்த முயற்சி, வாழக்கூடிய, நிலையான, உள்ளடக்கிய, பசுமையான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் ஸ்மார்ட் நகரத்தைக் அடிப்படையாகக் கொண்ட குறைந்த கார்பன் நகரத்தை உருவாக்குவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கும் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
அதே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு ஆதரவளித்த ஜஸ்மின் உணவு நிறுவனம் மற்றும் பில்லியன் கோத்தா பெர்மாய் பல்பொருள் பேரங்காடிக்கு யே ஷியான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், செபராங் பிறை மக்கள் எம்.பி.எஸ்.பி நகரத்தை தூய்மையாகவும், அழகாகவும், வாழ்வதற்கு வசதியாகவும் மாற்ற உதவ இணைந்து பணியாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.