பசுமை பள்ளி பரிசளிப்பு விழா

பினாங்கு பசுமை பள்ளி போட்டி வெற்றியாளர்களுடன் பிரமுகர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

ஆறாவது முறையாக செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமை பள்ளி போட்டியில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த 107 ஆரம்பப்பள்ளியும் 42 இடைநிலைப்பள்ளியும் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா செபராங் பிறை நகராண்மைக் கழக வளாகத்தில் இனிதே நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ஆரம்பப்பள்ளி பிரிவுக்காக பூன் பேங் சீனப்பள்ளி வெற்றி வாகை சூடியதோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையை தத்தம் தாமான் இம்பியான் தேசியப்பள்ளியும் செங் கியாவ் சீனப்பள்ளியும் தட்டி சென்றனர்.

மேலும், இடைநிலைப்பள்ளி பிரிவுக்காக ஶ்ரீ மூடா இடைநிலைப்பள்ளி முதல் நிலையும் பெராபி இடைநிலைப்பள்ளி இரண்டாம் நிலையும் மற்றும் புக்கிட் மெர்தாஜாம் கொன்வென்ட் இடைநிலைப்பள்ளி மூன்றாம் நிலையிலும் வெற்றி பெற்றனர். வெற்றிப்பெற்ற பள்ளிகள் ரொக்கப்பணம் மற்றும் சான்றிதழை செபராங் பிறை நகராண்மைக் கழக செயலாளர் ரோசாலி முகமதுமிடம் பெற்றுக் கொண்டனர்.

பசுமை பள்ளி போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்

நிகழ்வில் சிறப்புரை வழங்கியபோது அண்மையில் பெய்த கனத்த மழைக்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தை பற்றி கருத்துரைத்தார். அல்மா மற்றும் மாக் மண்டின் வட்டாரத்தில் இரண்டு நாட்களுக்கு நீடித்த வெள்ளத்தில் இருந்து சுமார் 70 டன் குப்பைகளை அப்புறப்படுத்தப்பட்டது எனக் குறிப்பிட்டார். குடியிருப்பாளர்கள் குப்பைகளை முறையாக வீசும்படி பரிந்துரைத்தார். பினாங்கு மாநில அரசு அமல்படுத்தியுள்ள அடிப்படை பொருட்களில் இருந்து கழிவுகளை அமல்படுத்தும் திட்டத்தின் வழி வெள்ள பிரச்சனையும் கையாள முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.