பினாங்கில் உகாதி புத்தாண்டு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது

Admin

ஜார்ச்டவுன் – இன்று மாலை ஜார்ச்டவுனில் உள்ள தாமான் டோபி கவுட்டில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில் நூற்றுக்கணக்கான தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள் உகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

தெலுங்கு சமூகத்தினர் ‘சோபக்ருது’ ஆண்டை வரவேற்கின்றனர்.

பக்தர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, புத்தாண்டை முன்னிட்டு இறையருள் பெற ஆலயத்திற்கு வருகையளித்தனர்.

கோவிலின் நுழைவாயிலில் வெள்ளை அரிசி மாவு கோலம், தோரணம் மற்றும் வாழை மரங்கள் கட்டப்பட்டு பக்தர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தது.

இந்த விழாவின் போது தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்த பங்கேற்பாளர்களின் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், பினாங்கில் உள்ள தெலுங்கு சமூகம் நீண்ட மற்றும் பெருமை வாய்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் கலாச்சார பாரம்பரியக் கொண்டாட்டத்தை கௌரவிப்பதிலும் பாதுகாப்பதிலும் பெரும் பெருமை கொள்கிறார்கள், என்றார்.

“நமது கலாச்சாரம் நமது அடையாளம், அதுவே நம்மை ஒரு சமூகமாகத் தனித்துவமாக்குகிறது.

“இன்றையக் கொண்டாட்டம் நமது சுற்றுலாத் துறை மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு ஒரு ஊன்றுகோளாகத் திகழ்கிறது.

“இவை அனைத்தும் ‘பினாங்கை நேசிக்கிறேன்’ என்னும் அரசின் திட்டத்திற்கு உத்வேகத்தை அளிக்கின்றன,” என்று சாவ் தனது உரையில் கூறினார்.

மேலும், மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழுத் உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், ஜார்ச்டவுன் உலக பாரம்பரிய அமைப்பின் (GTWHI) பொது மேலாளர் டாக்டர் ஆங் மிங் சீ, மலேசிய தெலுங்கு சங்க (TAM) துணைத் தலைவர் ஸ்ரீ சத்தியா சுதாகரன் மற்றும் பினாங்கு கிளைத் தலைவர் பி. ராமராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“எனவே, இன்று மாலை நடைபெற்ற இந்தக் கொண்டாட்டம், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் தெலுங்கு சமூகத்தின் வாழ்க்கை முறையைக் காண்பதற்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

“இந்த விலைமதிப்பற்ற சமூக பாரம்பரியத்தைப் பாதுகாப்பது நமது பகிரப்பட்ட பொறுப்பு என்று நான் உறுதியாக நம்புகிறேன். குறிப்பாக உகாதி கொண்டாட்டம் போன்றவை, நமது வருங்கால சந்ததியினர் பல கலாச்சார நிகழ்ச்சிகளின் தனித்துவத்தையும், பன்முக கலாச்சாரத்தின் மகிழ்ச்சியையும் புனிதத்தையும் பினாங்கில் அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்ய முடியும்.

“இந்த நிகழ்ச்சி நாம் ஒன்று கூடுவதற்கும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும், நமது மாநிலத்தை மிகவும் சிறப்பானதாக மற்றும் பன்முகத்தன்மையைப் பாராட்டுவதற்கும் ஒரு வாய்ப்பாகும்,” என்று அவர் கூறினார்.

ஒரு முதல்வராக, இந்தக் கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன் என்று சாவ் மேலும் கூறினார்.

“நமது கலாச்சார பாரம்பரியத்தை ஆதரிப்பதும், மேம்படுத்துவதும், நமது இளைய தலைமுறையினர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகளை வழங்குவதும் நமது கடமை என்று நான் நம்புகிறேன்.

“மாநில அரசும் நமது மாநிலத்தில் கலை மற்றும் கலாச்சாரத்தை தொடர்ந்து ஆதரிக்கும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து வளர்ந்து வருவதை உறுதி செய்யும்.

“உங்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளது, என்றார்.

அவரது உரையின் முடிவில், பினாங்கு தெலுங்கு சங்க பினாங்கு கிளைக்கு ரிம10,000 ஒதுக்கீடு வழங்குவதையும் சாவ் அறிவித்தார்.

ஜெக்டிப் மற்றும் இராயர் இச்சங்கத்திற்கு முறையே ரிம10,000 மற்றும் ரிம5,000 ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தனர்