பினாங்கில் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூக நலத் திட்டங்களால் மாநில அரசு பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது

Admin
whatsapp image 2024 05 27 at 10.57.05

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில பொது மக்களுக்குச் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூக நலன் திட்டங்களே மாநில நிதிப் பற்றாக்குறை அதிகரிப்புக்குக் காரணம் என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டங்கள் செயல்படுத்துவதால் மாநில வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லாவிட்டாலும், மாநில வரவு செலவில் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது. இது மாநில அரசு மக்கள் மீது கொண்ட அக்கறையைச் சித்தரிகிறது என்று சாவ் கூறினார்.

“மாநில சமூக நலத் திட்டங்களில் i-Sejahtera, ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள், தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் தங்கக் குழந்தை என பல்வேறு தங்கத் திட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

“இதில் வாடகைக் கார் ஓட்டுநர்கள், பேருந்து நடத்துநர்கள் மற்றும் மூன்று சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மற்றும் மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதி ஒதுக்கீடும் அடங்கும்.

“மாநிலத்தின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த ஆண்டுக்கு ரிம240 மில்லியன் நிதி ஒதுக்கீடுச் செய்யப்படுகிறது,” என்று சாவ் பினாங்கு சட்டமன்ற அமர்வின் போது தெய் லாய் ஹெங்கின் வாய்மொழி கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

மாநிலப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கானக் காரணத்தையும், பற்றாக்குறையைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் தெரிவிக்குமாறு தெய் கூடுதல் கேள்வி எழுப்பினார்.

அண்மையில் நடைபெற்ற ஆட்சிக்குழு சந்திப்புக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பற்றாக்குறையைக் குறைக்கும் திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக சாவ் மேலும் கூறினார்.

“இத்திட்டத்தின் மூலம், மாநில அரசின் 2025 வரவு செலவில் அதிகபட்ச உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.

“ஏனென்றால், மாநிலப் பற்றாக்குறையை ஈடுகட்ட, மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியின் திரட்டப்பட்ட இருப்பை நாம் எப்போதும் சார்ந்திருக்க முடியாது.

“மாநிலத்தில் சட்டப்பூர்வமற்ற செலவினங்களுடன் ஒப்பிடும்போது சட்டப்பூர்வ செலவினங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

“அதே நேரத்தில், மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான எங்கள் முயற்சிகளையும் இரட்டிப்பாக்குவோம்,” என சாவ் சூளுரைத்தார்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த மாநில அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து சாவ்விடம் கேள்வி எழுப்பப்பட்டது.

மாநில அரசு செலுத்த வேண்டிய சம்பள உயர்வுக்கான மொத்த செலவு குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை, என்று சாவ் பதிலளித்தார்.

ஆனால், மாநில அரசு அடுத்த ஆண்டு சம்பள உயர்வை அமல்படுத்தப்போகிறோம் என்றால், அடுத்த ஆண்டுக்கான மாநில வரவு செலவில் அதன் மொத்த செலவினத்தை இணைக்க வேண்டும்,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.