பினாங்கில் 26,255 மலிவு விலை வீடுகள் கட்டப்படும் – ஜெக்டிப்

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப்

மாநில அரசு கலிடோனியா தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருட்டு மலிவு விலை வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. 15.106 ஏக்கர் நிலத்தில் 200 தரை வீடுகள் “நகர வீடு’ பாணியில் கட்டப்படும் என அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ.
மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் சேகரிக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில் கலிடோணியா தோட்ட மக்களுக்கு 124 வீடுகளும், மீதமுள்ள வீடுகள் பைராம் மற்றும் விக்டோரியா தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் என சட்டமன்ற தொகுப்புரையில் கூறினார்.
பொது மக்கள் சொந்த வீடுகள் வாங்கும் கனவை நினைவாக்க மாநில அரசு அனைத்து மாவட்டங்களிலும் 26,255 வீடுகள் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும். வசதி குறைந்த பொது மக்கள் வீடுகள் வாங்க சிரமப்படுவதால் அதிகமான மலிவு விலை வீடுகள் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
வருகின்ற 10 முதல் 15 ஆண்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 14 வீடமைப்புத் திட்டங்களும் முழுமைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டும் மலிவு விலை வீடுகளுக்கு வசதி குறைந்த பொதுமக்கள் வீடுகள் வாங்க முற்படும் போது அதிகமான எண்ணிக்கையில் வங்கி கடனுதவி நிராகரிக்கப்படுகிறது. மாநில அரசு வசதி குறைந்தவர்கள் மலிவு விலை வீடுகள் பெறுவதை உறுதிப்படுத்த வாடகைக்கு மனை வாங்கும் திட்டம் (konsep Skim Sewa Beli) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார் திரு ஜெக்டிப். இத்திட்டம் தாமான் செருலிங் எமாஸ் மற்றும் தாமான் சுங்கை டூரி பெர்மாய் ஆகிய இரண்டு வீடமைப்புத் திட்டங்களிலும் நடைமுறை செய்யப்பட்டு 155 யூனிட் வீடுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்புதிய அணுகுமுறை பொது மக்களிடமிருந்து அதிகமான வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.