பினாங்கு அனைத்துலகக் கட்டற்ற பாணியிலான சறுக்கு விளையாட்டுப் போட்டி

Admin

இரண்டாவது முறையாகப் பினாங்கு மாநிலம் அனைத்துலகக் கட்டற்ற பாணியிலான சறுக்கு விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துகிறது. இப்போட்டியினை கட்டற்ற உள்நிலை சறுக்கு விளையாட்டுக் கழகம், மாநில விளையாட்டு மன்றத்துடன் இணைந்து தொகுத்து வழிநடத்துகின்றது.

இந்தக் கட்டற்ற பாணியிலான சறுக்கு விளையாட்டுப் போட்டி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், கட்டற்ற உள்நிலை சறுக்கு விளையாட்டுக் கழகம் மற்றும் மாநில விளையாட்டு மன்றத்தின் அயராத உழைப்பினால் இப்போட்டி மாநில அளவில் மட்டுமின்றி அனைத்துலக நிலையிலும் வழிநடத்த முடிந்துள்ளது என மாநில இளைஞர் & விளையாட்டு, மகளிர்,  குடும்பம், மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர் சோங் எங் கூறினார்.

அனைத்துலகக் கட்டற்ற பாணியிலான சறுக்கு விளையாட்டுப் போட்டியை முதன் முறையாக மலேசியாவில் ஏற்று நடத்திய பெருமை பினாங்கு கட்டற்ற உள்நிலை சறுக்கு விளையாட்டுக் கழகத்திற்கே சேரும். 2012ஆம் ஆண்டு இப்போட்டி முதன் முறையாக அனைத்துலக அளவில் பினாங்கு மாநிலத்தில் நடத்தப்பட்டது. இவ்வாண்டு இரண்டாவது முறையாக இப்போட்டியை ஏற்று நடத்துகிறது. இப்போட்டியில் சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான், வியட்னாம்,  மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து திறன்மிக்க  சறுக்கு விளையாட்டாளர்கள்  கலந்து கொள்வர்.

 பினாங்கு வாழ் இளைஞர்களைச் சறுக்கு விளையாட்டுப் போட்டியில் தலைச்சிறந்தவர்களாக உருவாக்குவதே அதன் முதன்மை நோக்கமாக அமைவதாக அதன் கழகத் தலைவர் லிம் தொங் சூன் கூறினார். மேலும், இக்கழக ஏற்பாட்டில் 2-6-2013 ஆம் நாள் சறுக்கு விளையாட்டுப் பட்டறை இலவசமாக ‘டைம் ஸ்குவே’ எனும் தலத்தில் நடைபெறவுள்ளது. பொது மக்களிடையே இச்சறுக்குப் போட்டியை அறிமுகப்படுத்துவதே இப்பட்டறையின் குறிக்கோளாக அமைகிறது.

 கட்டற்ற உள்நிலை சறுக்கு விளையாட்டுக் கழகமும் மாநில விளையாட்டு மன்றமும் இணைந்து சறுக்கு விளையாட்டுப் போன்ற ஆரோக்கியம் மிக்க நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில் கொண்டிருக்கும் ஈடுபாட்டைக் கண்டு புகழ் மாலை சூட்டினார் ஆட்சிக் குழு உறுப்பினர் சோங் எங். இந்தக் கூட்டுறவு முயற்சி விளையாட்டுத் துறையில்  தொடர்வதன் மூலம் மாநில அரசின் தூய்மை, பசுமை, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மிக்க பினாங்கை உருவாக்கும் குறிக்கோளை அடைய முடியும் என வலியுறுத்தினார்.

 

நானிங், குவாங் தீ, சீனாவில் நடைபெற்ற கட்டற்ற பாணியிலானச் சறுக்கு விளையாட்டுப் போட்டியில் வெற்றி மகுடம் சூடிய ஓ சீ குவான் தனது விளையாட்டுச் சாகசத்தை வெளிப்படுத்துகிறார்.
நானிங், குவாங் தீ, சீனாவில் நடைபெற்ற கட்டற்ற பாணியிலானச் சறுக்கு விளையாட்டுப் போட்டியில் வெற்றி மகுடம் சூடிய ஓ சீ குவான் தனது விளையாட்டுச் சாகசத்தை வெளிப்படுத்துகிறார்.