பினாங்கு மாநிலத்தில் தீப ஒளி கொண்டாட்டம் 2013

பினாங்கு மாநில அரசும் பினாங்கு வர்த்தகத் தொழிலியல் சங்கமும் இணைந்து 6-வது தீப ஒளி கொண்டாட்ட விழா நடத்தியது. இதனை மெக்சிஸ் ஹோட்லிங்க் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பினாங்கு லிட்டல் இந்தியா வளாகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். தீபாவளியை முன்னிட்டு பரபரப்பாக இருக்கும் இவ்வேளையில் அதனை மெருகூட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

உள்ளூர் நடனமணிகளான “தெ யுனிவசல்” குழுவினரின் அறிமுக ஆடலுடன் இனிதே நிகழ்ச்சி தொடங்கியது. அதோடு, தலைநகர் பாடகர்களைக் கொண்டும் ஆடல் பாடல், சேலை அழகு ராணிப் போட்டி எனப் பல நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களின் வற்றாத ஆதரவை வழங்கினர். இந்நிகழ்வை குத்து விளக்கு ஏற்றி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து பேசுகையில் மேதகு லிம் குவான் எங் பினாங்கு மாநில அரசும் பினாங்கு வர்த்தக சங்கமும் இணைந்து பல நிகழ்வுகளைப் படைத்து வருவதாகவும் அதோடு பினாங்கு மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மக்கள் கூட்டணி அரசாங்கம் உடனுக்குடன் வழங்குவதையும் சுட்டிக் காட்டினார். தீப ஒளி கலைநிகழ்ச்சியின் தலைமை ஆதரவாளரான மெக்சிஸ் ஹோட்லிங்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் தான் லெய் ஹான்க்கு தமது நன்றியைத் தெரிவித்து கொண்டார் மாநில முதல்வர்.

மெக்சிஸ் ஹோட்லிங்க் தீப ஒளி கொண்டாட்டம் 2013 நிகழ்வில் கலந்து கொண்ட மாநில முதல்வரும் சிறப்புப் பிரமுகர்களும்.
மெக்சிஸ் ஹோட்லிங்க் தீப ஒளி கொண்டாட்டம் 2013 நிகழ்வில் கலந்து கொண்ட மாநில முதல்வரும் சிறப்புப் பிரமுகர்களும்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி உரையாடுகையில் இம்மாதிரியான நிகழ்வு தொடர்ந்து நடைபெறுவதற்கு அனைத்து தரப்பினரும் வற்றாத ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இத்தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் கொண்டாட தமது வாழ்த்துகளையும்  தெரிவித்தார்.

மேலும், தீபாவளி நிகழ்வில் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயபாலன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் திரு தனசேகரன், பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினர் சொங் எங், கொம்தார் நாடாளுமன்ற உறுப்பினர் இங் வேய்க், பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கோன் யோவ், பினாங்கு வர்த்தகத் தொழிலியல் சங்க தலைவர் டத்தோ வசந்தராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பிரமுகர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போற்றி மாலை அணிவித்து மரியாதைச் செய்யப்பட்டது.