பினாங்கு மாநில சிறுத் தொழில் மற்றும் அங்காடி வியாபாரிகள் இன்று தொடங்கி உதவித் தொகை பெறுவர் – ஜெக்டிப்

Admin

ஜார்ச்டவுன் -பினாங்கு மாநில பினாங்கு மாநகர் கழகம்(எம்.பி.பி.பி)
மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) ஆகிய இரு ஊராட்சி மன்றங்களில் பதிவுப்பெற்ற சிறுத் தொழில் வியாபாரிகள் இன்று உதவித் தொகை பெறுவர். கொவிட்-19 தாக்கத்தால் தினசரி வருமானத்தை இழந்து தவிக்கும் சிறுத் தொழில் வியாபாரிகளுக்கு உதவும் வகையில் இவ்வுதவித் தொகை வழங்கப்படுவதாக கொம்தாரில் நடைபெற்ற முகநூல் நேரலை செய்தியாளர் சந்திப்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அறிவிப்பு செய்தார்.

எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி மாநகர் கழகங்களில் பதிவுப்பெற்ற தத்தம் 6,957 மற்றும் 7,010 சிறுத்தொழில் வியாபாரிகளுக்கு தலா ரிம500 வழங்கியது. மாநில அரசு இத்திட்டத்திற்கு ரிம 6,983,500 நிதி ஒதுக்கீடு செய்தது. அதில் இன்று எம்.பி.பி.பி சேர்ந்த 4,158 சிறுத் தொழில் மற்றும் சாலையோர வியாபாரிகள் நிதி பெறுவர். எஞ்சிய 2,799 பேர் இம்மாதம் ( ஏப்ரல்) 15-ஆம் தேதிக்குள் இவ்வுதவித் தொகையைப் பெறுவர். இதனிடையே, எம்.பி.எஸ்.பி சிறுத் தொழில் மற்றும் அங்காடி வியாபாரிகள் கட்ட கட்டமாக இந்த உதவித் தொகையை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பதிவுப்பெற்ற சிறுத் தொழில் மற்றும் அங்காடி வியாபாரிகள் இந்த உதவித் தொகைக்கான விபரங்களை அறிய www.mbpp.gov.my மற்றும் www.mbsp.gov.my எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.

இதனிடையே, பி.பி.ஆர் வீடமைப்புத் திட்ட 4,869 குடியிருப்பாளர்கள் இரண்டு மாதம் (மே & ஏப்ரல்) வீட்டு வாடகை விலக்கு பெற்றுள்ளனர். இரண்டு ஊராட்சி மன்றங்களின் கீழ் செயல்படும் 1,816 யூனிட்கள் இச்சலுகையைப் பெறுகின்றனர். வீடமைப்புத்துறையில் கீழ் செயல்படும் மாநில அரசின் 2,911 யூனிட்களுக்கு இரண்டு மாதம் வாடகை விலக்கு வழங்கப்படுகிறது.

தொடர்ந்து, மாநில அரசு மற்றும் ஊராட்சி மன்றங்களின் கீழ் செயல்படும் 10,999 வணிக வளாகங்கள் (இதில் 10,552 சிறுத் தொழில் மற்றும் அங்காடி வியாபாரிகளும் அடங்குவர்) ஒரு மாத வாடகை விலக்கு சலுகையைப் பெறுகின்றனர். மாநில அரசின் கொள்முதல் மற்றும் வாடகை திட்டத்தின் (ஆர்.எஸ்.கே.என்) கீழ்ழ் வசிக்கும் 541 குடியிருப்பாளர்கள் மூன்று மாதக் காலம் (ஏப்ரல், மே & ஜுன்) வாடகைக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும், வீடமைப்புத் திட்டங்களின் நில வரி கட்டணமும் மூன்று மாதங்கள் (31 மே – 30 ஆகஸ்ட் வரை) செலுத்த தேவையில்லை என டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் விவரித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்திய 17-ஆம் நாளான இன்று பினாங்கு மாநில பெருநிலத்தில் 98.9விழுக்காடு மற்றும் தீவுப்பகுதியில் (98.85) பின்பற்றுகின்றனர். பினாங்கில் 100%-ஆக கொண்டுவர இரண்டு ஊராட்சி மன்றங்களும் தொடர்ந்து பணியில் ஈடுப்படும் என ஜெக்டிப் சூளுரைத்தார்.

அதே செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு உபகரணப் பொருட்களான முகக் கவசம், கைத் தூய்மி, நோய் கில்லி மருந்து (peralatan nyahkuman) மற்றும் வெப்பமானி ஆகியவை இரண்டு ஊராட்சி மன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது பாராட்டக்குரியது.