பிறை, JPWK ஏற்பாட்டில் அன்னையர் தினக் கொண்டாட்டம்

Admin

பிறை – அண்மையில் பிறை சட்டமன்ற
பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின்(JPWK) ஏற்பாட்டில் அன்னையர் தினக் கொண்டாட்டம் இனிதே நடைபெற்றது.

பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில் நம்மை தாங்கிய அன்னையின் அன்பு, தியாகம், பாசம், அக்கறை,அரவணைப்பு மற்றும் நேசத்தை நினைவுக் கூறும் நன்னாளாக அன்னையர் தினம் திகழ்கிறது. எனவே, JPWK ஏற்பாட்டில் பிறை வட்டாரத்தைச் சேர்ந்த 100 அன்னையர்களுக்குப் பரிசுக்கூடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அன்னையர்களை மகிழ்விக்கும் பொருட்டு அனிச்சல் வெட்டி, விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.

மேலும், மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி; எம்.பி.எஸ்.பி கவுன்சிலரும் மலேசிய தேசிய தமிழர் குரல் தலைவருமான டேவிட் மார்ஷல்; பிறை எம்.பி.கே.கே தலைவர் ஸ்ரீ சங்கர் மற்றும் பிறை சட்டமன்ற JPWK தலைவர் பூஜா மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

“பிறை தொகுதியில் மீண்டும் JPWK முன்முயற்சியுடன் செயல்படுவது பாராட்டக்குரியது.
JPWK, சமூக மேம்பாட்டுக்குத் திட்டங்கள் செயல்படுத்துவது மட்டுமின்றி பெண்கள் மற்றும் குடும்ப முன்னேற்றத்திற்குப் பல ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் செயல்படுத்த உத்வேகம் கொள்ள வேண்டும்.

“ஒரு குழந்தை தரணியில் சிறந்து விளங்குவதற்குத் தாயின் பங்களிப்பு அளப்பரியது. எனவே, ஒவ்வொரு அன்னையரும் அவர்களின் குழந்தையை நன்நடத்தையுடன் வளர்ப்பதோடு, அவர்கள் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க ஊக்குவிக்க வேண்டும்,” என்று பேராசிரியர் ப.இராமசாமி வலியுறுத்தினார்.

“இந்திய மாணவர்கள் சிறந்த வழிகாட்டல் இன்றி தீயப் பழக்க வழக்கங்களில் அதிகமாக ஈடுபடுகின்றனர். எனவே, பெற்றோர் குறிப்பாக தாயார் அவர்களின் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீயச் சகாவாசம் கொள்ளாமல் கண்காணிக்க வேண்டும்,” என டேவிட் கேட்டுக் கொண்டார்.

பிறை எம்.பி.கே.கே மற்றும் JPWK இணை ஆதரவில் பகடிவதை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற விழிப்புணர்வு பட்டறைகள் நடத்த இணக்கம் கொண்டுள்ளதாக, ஸ்ரீ சங்கர் கூறினார்.