மிதிவண்டியின் மூலம் உடற்பயிற்சி பினாங்கு மக்களுக்கு முதல்வர் ஊக்குவிப்பு

பினாங்கு மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் பொருட்டு மாநில அரசு  கையாண்டு வரும் உத்திகளின் ஒரு கூறுதான் மிதிவண்டிப் பயன்பாடாகும். மிதிவண்டி ஓட்டுதல் உடற்பயிற்சிகளில் ஒன்றாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சிறந்ததொரு போக்குவரத்துச் சாதனமாகவும் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், மக்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துப் பொதுப் போக்குவரத்து வசதிகளையும் பிற போக்குவரத்து முறைகளையும் பயன்படுத்த மாநில அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. எனவே, இவ்வுத்தி ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சீரான மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்பின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில்தான், இயந்திரப் பயன்பாடற்ற மிதிவண்டியை ஒரு போக்குவரத்துக் கருவியாகப் பயன்படுத்த அரசு ஆர்வம் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முயற்சியை வலுப்படுத்தும் வண்ணம் மிதிவண்டிக்கான பாதைகள் மற்றும் வசதிகளைத் தயார் செய்யத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவ்வகையில், தூய்மையான பசுமையான பினாங்கு என்ற கருப்பொருளுக்கிணங்க மிதிவண்டியின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதில் பினாங்கு நகராண்மைக் கழகம் முக்கியப் பங்காற்றுகிறது. பினாங்கு நகராண்மைக் கழகத்துடன் இணைந்து மாநில அரசு எடுத்து வரும் முயற்சிகளாலும் நடவடிக்கைகளாலும் உடற்பயிற்சிக்கும் தினசரி நடவடிக்கைகளுக்கும் மிதிவண்டியின் பயன்பாடு பினாங்கு மக்களிடையே புகழ்பெற்று வருவதைக் காண முடிகிறது.

அண்மைய ஆண்டுகளில் மிதிவண்டியைப் பயன்படுத்தும் பினாங்கு மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, அம்மிதிவண்டி ஓட்டுநர்களின் வசதிக்காகத் தனிப்பட்ட மிதிவண்டிப் பாதைகளும் மோட்டார் வண்டியுடன் இணைந்து பயன்படுத்தும்  மிதிவண்டிப் பாதைகளும் பினாங்குத் தீவில் கீழ்க்காணும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

1) கிழக்குக் கரையோரமான பத்து மௌங்கிலிருந்து குயின்ஸ் பேய் வரை

மற்றும் ஜெரெஜாக் கரையிலிருந்து சுங்கை பினாங் வரை.

2) ஜோர்ஜ்டவுன் நகரம் மற்றும் பாரம்பரியத் தளப் பகுதி.

3) கெர்னியிலிருந்து தெலுக் பகாங் வரை

4) தெலுக் பகாங்கிலிருந்து பாயான் லெப்பாஸ் வரை

5) பாலிக் புலாவ் கிராமப் பகுதியிலிருந்து பாலிக் புலாவ் கடற்கரை வரை.

இதுவரை சுமார் 81கி.மீ தூர அளவிற்கு மிதிவண்டிப் பாதைகள் பினாங்குத் தீவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. பினாங்கு நகராண்மைக் கழகம் இந்த ஆண்டு மோட்டார் வண்டியுடன் இணைந்து பயன்படுத்தக்கூடிய 23கி.மீ தூரமுள்ள மிதிவண்டிப் பாதையை அமைக்கவும்  சீரமைக்கவும்          ரி.ம 250,000-ஐ ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் இதற்கான பணிகள் நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தனியார் நிறுவனங்களின் ஆதரவோடு இந்த ஆண்டு 16 மிதிவண்டிகள் பூட்டிவைக்கும் இடங்கள் பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஒரு தனியார் நிறுவனத்தின் ஆதரவோடு இளையோர் பூங்காவில் (YouthPark) இரண்டு மிதிவண்டிகள் நிறுத்தும் அடுக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதனைக் கடந்த ஆகஸ்ட்  26-ஆம் திகதி மாண்புமிகு முதல்வர் உயர்திரு லிம் குவான் எங் இளையோர் பூங்காவிற்கு வருகை புரிந்து அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். அந்நிகழ்வில் பொத்தானி மலை வாயிலாக இளையோர் பூங்காவிலிருந்து கொடி மலைக்குச் செல்லக்கூடிய மலைமிதிவண்டிப் பாதையும் திறப்பு விழா கண்டது. முதல்வர் லிம் குவான் எங் அந்தப் பாதைகளைக் குறிக்கும் வரைபடத்தின் திரையைத் திறந்து அதில் கையொப்பமிட்டுச் சிறப்புச் செய்தார். மாநில அரசும் பினாங்கு நகராண்மைக் கழகமும் ஒன்றுபட்டு, மாநில அரசு சார்பற்ற இயக்கங்களுடனும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மிதிவண்டி ஓட்டுதலை ஒரு சிறந்த போக்குவரத்துக் கருவியாகவும் உடற்பயிற்சிச் சாதனமாகவும் பயன்படுத்த ஊக்குவித்து வருகிறோம் என முதல்வர் தம் சிறப்புரையில் வலியுறுத்தினார்.

மிதிவண்டிப் பாதைகள் மற்றும் மிதிவண்டிக்கான வசதிகளை ஏற்பாடு செய்வதில் மற்ற மாநிலங்களைவிட பினாங்கு மாநிலமே சிறந்ததொரு அடித்தளமாகத் திகழ்கிறது. ஆகவே, மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பாலும் ஆதரவாலும் பினாங்கு மாநிலம் மலேசியாவில் மட்டுமின்றி ஆசியாவிலும் புகழ்மிக்க மிதிவண்டி மையமாக விளங்கி ‘குன்றின் மேலிட்ட விளக்காகத்’ திகழும் என்றும் முதல்வர் லிம் குவான் எங் நம்பிக்கை தெரிவித்தார். இந்தத் தொடக்க விழாவில், முதல்வர் உட்பட தஞ்சோங் பூஙா சட்டமன்ற உறுப்பினர் தெ ஈ சியு, பினாங்கு நகராண்மைக் கழகத் தலைவர் ஹஜ்ஜா பத்தாயா, மாநில அரசு ஊழியர்கள், மிதிவண்டி ஓட்டுநர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர். பினாங்கு முதல்வரும் நகராண்மைக் கழகத் தலைவரும் பினாங்கு மற்றும் நகராண்மைக் கொடிகளை அசைக்க சுமார், 100 மிதிவண்டி ஓட்டுநர்கள் மலைமிதிவண்டிப் பாதையை நோக்கிப் பயணித்தனர்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’

என்ற பழமொழிக்கொப்ப நோய் நொடியின்றி நலமாகவும் வளமாகவும் வாழ மிதிவண்டியைப் பயன்படுத்துவோம்; சாலை நெரிசலையும் குறைப்போம்.