விளையாட்டுத்துறை ஒற்றுமை மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு வித்திடுகிறது – சூன் லிப் சீ

ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் தலைமையில் ‘8வது முறையாக இந்திய இளைஞர்களுக்கான ஒற்றுமை போலிங் போட்டி’சிறப்பாக நடைபெற்றது.

இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ பினாங்கு போலிங் மையத்தில் நடைபெற்ற இப்போட்டியினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

“மாநில அரசின் ‘அனைவருக்குமான விளையாட்டு’ (Sports for all) என்ற கோட்பாட்டில் போட்டி விளையாட்டு என்பது வயது, இனம், பாலினம் மற்றும் பின்புலம் சார்ந்தது அல்ல. மாறாக ஒவ்வொரும் எவ்வித தடையும் இன்றி அனைத்து விளையாட்டுகளிலும் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.

“பொதுவாகவே கபடி, சீலாட், வூ சூ போன்ற போட்டி விளையாட்டுகள் ஓர் குறிப்பிட்ட இனத்தின் விளையாட்டாக கருதப்படுகிறது. இருப்பினும் ஆற்றல் மிக்க அனைத்து விளையாட்டாளர்களும் அனைத்து விளையாட்டுகளிலும் கலந்து கொள்ள உத்வேகம் கொள்ள வேண்டும்.

“விளையாட்டுத்துறை பொது மக்களிடையே ஒற்றுமையை பேணுவதோடு சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு அடித்தளமாக திகழ்கிறது,” என ஆட்சிக்குழு உறுப்பினர் சூன் லிப் சீ கூறினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நினைவுச்சின்னம் எடுத்து வழங்கினார்.

8-வது முறையாக தொடர்ந்து புக்கிட் பெண்டேரா இளைஞர் பிரிவின் கீழ் நடைபெறும் இப்போட்டியில் இம்முறை 16 குழுக்களை பிரதிநிதித்து 50 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில பொருளாளர் குமாரி கலாராணி, மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் இளைஞர் பிரிவு தலைவர் திரு அகிலன் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டு குழுத் தலைவர் திரு துஷாலன் கலந்து கொண்டனர்.

புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் கிரிஸ் லீ சூன் கிட் நிறைவு விழாவில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கினார்.

இப்போட்டியின் வெற்றி மகுடத்தை ஹார்ட் ராக் அணியும், 2 வது இடத்தில் ஒஸ்ராம் அணியும், 3 வது இடத்தில் எச்.ஒய்.ஓ குளுகோர் அணியும் வெற்றி பெற்றனர்.

7

சிறந்த போலிங் பந்து வீச்சாளர் என்ற பட்டத்தையும் பரிசையும் ஆண்களுக்கான பிரிவில்
ஒஸ்ராம் அணியைச் சேர்ந்த திரு.ஜோனியும் பெண்களுக்கான பிரிவில்
குமாரி ஜெயந்தியும்(ஓ யே அணி) தெந்தெடுக்கப்பட்டனர்.

இந்திய இளைஞர்களிடையே நல்லிணக்கத்தை பேணுதலும் வலுப்படுத்துதலும் இப்போட்டியின் முக்கிய நோக்கமாக திகழ்வதாக மலேசிய இந்து சங்க புக்கிட் பெண்டேரா பேரவையின் தலைவர் திரு தர்மன் தெரிவித்தார்.

இப்போட்டி தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது, என்றார்.