கழிவுகளை வளங்களாக உருமாற்றும் அலாம் அலிரான் குவாலிட்டி நிறுவனத்துக்கு மலேசிய சாதனைப் புத்தக அங்கீகாரம்

Admin
img 20260724 wa0008

ஜார்ச்டவுன் – பினாங்கின் அண்மைய மலேசிய சாதனைப் புத்தகப் பதிவில், கழிவுகளை புதுமையான முறையில் கையாள்வதன் மூலம் அவற்றை மதிப்புமிக்க வளங்களாக உருமாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

img 20260724 wa0009

‘மிகப்பெரிய பெல்ட் பிரஸ் முறை நீர் வெளியேற்றும் ஆலையை’ கொண்டிருப்பதற்காக அலாம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட் (AAK) நிறுவனம் பெற்றுள்ள மலேசிய சாதனைப் புத்தக அங்கீகாரம், நிலையான நீர் மேலாண்மை மற்றும் வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.

img 20260724 wa0002

“நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தினசரி பெருமளவில் கழிவுப் பொருட்களை உருவாக்குகின்றன என்றும், அவை வழக்கமாக நில நிரப்புப் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
img 20260724 wa0000

“சுங்கை டுவா பகுதியில், உருவாகும் கழிவுகள் மீட்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை சிமெண்ட் செங்கற்களாக’ மாற்றப்படுகின்றன. ஒரு காலத்தில் கழிவாகக் கருதப்பட்ட பொருள், தற்போது பயனுள்ள கட்டுமானப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

“இது உண்மையான மதிப்பை உருவாக்கும் புதுமையாகும். இது கழிவுகளைக் குறைத்து, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன், வட்டப் பொருளாதாரம் மூலம் புதிய பொருளாதார மதிப்பையும் உருவாக்குகிறது,” என்று ஆலாம் அலிரான் குவாலிட்டி (AAQ) நிறுவனத்துக்கு ‘மலேசியா சாதனைப் புத்தகம்’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு தெரிவித்தார்.

img 20260724 wa0004

சுங்கை டுவா சுத்திகரிப்பு ஆலை, தினசரி 10 மில்லியன் லிட்டர் வரையிலான நீர் சுத்திகரிப்புக் கழிவுகளைக் கையாளும் திறன் கொண்டதுடன், சுமார் 450 மெட்ரிக் டன் ‘alum sludge’ கையாளுவதாக மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளையில், சுத்திகரிக்கப்பட்ட நீர் மீட்கப்பட்டு மீண்டும் சுத்திகரிப்பு செயல்முறைக்குத் திருப்பி விடப்படுவதன் மூலம் நீர் இழப்புகள் குறைக்கப்பட்டு, பினாங்கின் நீண்டகால நீர் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

img 20260724 wa0007

“இத்திட்டம், புத்தாக்கத்தை ஊக்குவிப்பதுடன், நமது வளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதற்கான வழியையும் ஏற்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

“இது போன்ற திட்டங்கள், நிலையான செயல்பாடுகள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன் மட்டுமல்லாமல், பொருளாதார மதிப்பை உருவாக்கவும், புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

நிலையான நீர் மேலாண்மையில் அலாம் அலிரான் குவாலிட்டி (Alam Aliran Kualiti) நிறுவனம் வெளிப்படுத்தி வரும் தொலைநோக்குப் பார்வை, அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்திற்காக, அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ பாலன் அகம்பரம் மற்றும் நிர்வாகம் குழுவினரையும் மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் பாராட்டினார்.

MBOR அங்கீகாரம் தங்களது பயணத்தின் இலக்கு அல்ல என்றும், மாறாக, இது மிகப்பெரிய பொறுப்புடனான புதிய பயணத்தின் தொடக்கம் என்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர் கோகுலன் பாலன் தெரிவித்தார்.

“எங்களைப் பொறுத்தவரை, கழிவு என்பது ஒரு செயல்முறையின் முடிவு அல்ல; மாறாக, அது ஒரு புதிய வாய்ப்பின் தொடக்கமாகும். தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும் வகையில் ‘சுழிய கழிவு’ தீர்வுகளை உருவாக்குவதற்கான எங்களது அர்ப்பணிப்பை இந்த அணுகுமுறையே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்ட பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் (PBAPP) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஸ்ரீ ஜசெனி மைடின்சா, நீர் சுத்திகரிப்புச் செயல்முறையின்போது உருவாகும் கழிவுகளை நிர்வகிப்பதற்காக, 2022ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி PBAPP வாரியம் AAK நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டதை நினைவுகூர்ந்தார்.

கழிவு மேலாண்மைத் திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தும் வழிமுறைகளை எடுத்துக்காட்டும் வகையில், இம்மாதத் தொடக்கத்தில் பினாங்கில் நடைபெற்ற கருத்தரங்கின்போது, பங்குதாரர்கள், தேசிய நீர் சேவை ஆணையம் (SPAN) மற்றும் நீர் விநியோக நிறுவனங்களின் பிரதிநிதிகளை AAK நிறுவனத்தின் செங்கல் தொழிற்சாலையைப் பார்வையிட PBAPP அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வழி, நம்பகமான சுற்றுச்சூழல் தீர்வு வழங்குநராகத் திகழும் AAK நிறுவனத்தை, மலேசியாவின் தேசிய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் (NCCIM) தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் நாகப்பன் பாராட்டினார்.

மேலும், 2032 முதல் 2072ஆம் ஆண்டு வரை பினாங்கின் நீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் பேராக் மாநிலத்துடன் முக்கிய நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அவர்களைப் பாராட்டினார்.

MBOR விருது விழாவில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, AAK தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ பாலன் அகம்பரம் மற்றும் MBR தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கிறிஸ்டோபர் வோங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.