ஜார்ச்டவுன் – மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை ஏற்பாட்டில் 47-வது திருமுறை ஓதும் விழா ஸ்காட்லாந்து சாலையில் உள்ள இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

“மலேசிய இந்து சங்கம் (MHS) பினாங்கு மாநிலப் பேரவை, சமய வகுப்பு மட்டுமன்றி பாரம்பரிய மரபுகளை மாணவர்கள் மத்தியில் பரப்பும் பணியை சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது மாநிலம் முழுவதும் 42 தேவார வகுப்புகள் செயல்படுகின்றன.
“இந்த வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்குத் திருமுறை, பதிக பாராயணம், ஆன்மிக பாடங்கள், நன்னெறிக் கல்வி, மற்றும் பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொடுக்கின்றனர். இந்த வகுப்புகள் வாரந்தோறும் கோவில்கள் மற்றும் சமூக மையங்களில் நடைபெறுகின்றன.

“MHS மாநிலக் குழுவின் தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படும் இந்த முயற்சி, மாணவர்களிடையே மத சிந்தனையையும் தமிழர் கலாச்சாரத்தையும் வலுப்படுத்துகிறது,” என்று மலேசிய இந்து சங்க (MHS) பினாங்கு மாநிலப் பேரவைத் தலைவர் விவேக ரத்னா தர்மன் தெரிவித்தார்.
திருமுறை போட்டியின் காலக்கட்டத்தில் கூடுதலான மாணவர்களின் வருகை பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவுக் காணப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் பெற்றோர்கள் கவனம் செலுத்தி மாணவர்கள் தொடர்ச்சியாக தேவார வகுப்பில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் கலந்து கொண்டு, நிகழ்ச்சிக்கு ஆதரவாக ரிம50,000 நிதியுதவி வழங்கினார். மேலும், பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் ரிம5,000 நிதியுதவி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசாங்கம் சமயம் மற்றும் சமூகநலன் மிக்க திட்டங்களுக்குத் தொடர்ந்து நல்லாதரவு அளிக்கும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான இராயர் கூறினார்.

எதிர்காலத்தை முன்னெடுத்து,
கலாச்சாரம் மற்றும் சமூக நல நடவடிக்கைகள் ஏற்று நடத்தும் வகையில் பல்நோக்கு மண்டபத்தை நிறுவும் மலேசிய இந்து சங்கத்தின் இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில் புக்கிட் மிஞ்சாக் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என
மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில பேரவை,விவேக ரத்னா தர்மன் தலைமையில் சிறப்பாக வழிநடத்தப்படுகிறது என பாராட்டினார். இந்த விழாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரிம10,000 நிதியுதவி வழங்கினார்.
இந்த திருமுறை ஓதும் விழாவில்
மாணவர்கள் தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், பேச்சுப் போட்டி, திருமுறை பதிகப் பாராயணம், பஞ்சபுராணம் என பல சமயப் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.
பினாங்கு மாநில அளவிலான திருமுறை ஓதும் போட்டியில் 11 வட்டாரப் பேரவையைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற 80 போட்டியாளர்கள் இம்மாநிலத்தைப் பிரதிநிதித்து வருகின்ற செப்டம்பர் 14-ஆம் தேதி ஷா ஆலாமில் நடைபெறும் தேசிய ரீதியிலான திருமுறை ஓதும் போட்டியில் கலந்து கொள்வர் என அறியப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்மூகம், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், மலேசிய இந்து சங்க துணைத் தலைவர் ஸ்ரீ காசி டத்தோ மோகன் ஷான், பினாங்கு மாநில ம.இ.க தலைவர் டத்தோ தினகரன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.