சேலையில் காற்பந்து விளையாடிய சிங்கப்பெண்கள்!!!

Admin

‘சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆண் இனமே உன்னை வணங்குமே’
என்ற பாடல்வரிக்கு ஏற்ப பினாங்கு இந்திய காற்பந்து சங்க (PIFA) வீரப்பெண்கள் சேலை மற்றும் காலணி அணிந்து  கம்பீரத்துடன் காற்பந்து விளையாடும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. 

காற்பந்து என்றாலே ஆண்களுக்கான விளையாட்டு என்ற காலம் மாறி தற்போது நம் இந்திய பெண்களும் இத்துறையில் பீடுநடைப் போடுவதை கண்கூடாக காண முடிகிறது. 

அண்மையில், பினாங்கு இந்திய காற்பந்து சங்க விளையாட்டாளர்கள் சேலை அணிந்து காற்பந்து விளையாடிய காணொலி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் மிகவும் பரவலாகப் பகிரப்பட்டது. 

இந்த ஆண்டு மே மாதம், செபராங் பிறை சோனி ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் ‘பூவை காற்பந்து போட்டிக்கான’ அறிமுகமாகவும் பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமாகவும் இது அமைவதாக PIFA சங்கத் தலைவர் ஸ்ரீ சங்கர் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த பூவை காற்பந்து போட்டியின் முதலாம் நிலை வெற்றியாளர்களுக்கு ரிம5,000 மற்றும் இரண்டாம் நிலையில்  வெற்றி பெறுவோருக்கு (ரிம3,000) ரொக்கப்பணம் வழங்கப்படும். 

இந்த போட்டியின் அறிமுக புகைப்படத்தில் இந்திய பாரம்பரிய கூறுகள் இணைக்க எண்ணம் கொண்டதாகவும், இறுதியில் சேலை அணிந்து புகைப்படம் எடுக்க தீர்மானித்ததாக இரண்டாம் தவனையாக PIFA தலைவராக பதவியேற்ற ஸ்ரீ சங்கர் கூறினார். 

தொடக்கத்தில், பவித்ரா மற்றும் சுமதி என்ற இரு பெண்கள் காற்பந்து விளையாட ஆர்வம் கொண்டு ஸ்ரீ-ஐ அணுகினர். எனவே, அவர்களை மேலும் அதிகமான பெண்களை இணைத்து கொண்டு ஃபுட்சல் வெளியாட கூறியுள்ளார். 

இந்த இருவரின் முயற்சியில் முகநூலில் பதிவிடப்பட்ட ஃபுட்சல் விளையாட்டுக்கு எதிர்பாரா வண்ணம் சுமூகமான வரவேற்பு பெற்றது. 

“நான் சுமார் 10 முதல் 12 விளையாட்டாளர்கள் இணைந்திருப்பதாக நினைத்தேன். ஆனால், 80 பெண்கள் ஃபுட்சல் விளையாட ஆர்வம் கொள்வதாக கூறிய போது நான் முற்றிலும் அதிர்ச்சி கொண்டேன்,” என ஸ்ரீ நினைவுக்கூர்ந்த்தார்.

இதுவே, பெண்களுக்கான காற்பந்து விளையாட்டு போட்டி தொடங்குவதற்கு மையப்புள்ளியாக விளங்கியது.

செபராங் பிறை மாநகர் கழக(எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர் டேவிட் மார்ஷல் வழங்கிய ரிம3,000 நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த 80 பங்கேற்பாளர்கள்  6 அணிகளாக பிரிக்கப்பட்டு  ஃபுட்சல் போட்டி நடத்தப்பட்டது. 

இந்த பெண்களுக்கான காற்பந்து போட்டி ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என தவறுதலாக எண்ணம் கொண்டோம். அந்த தருணத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் திரையிடப்பட்ட ‘பிகில்’ படம் பெண்கள் காற்பந்து துறையில் கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தியது. 

“எனவே, PIFA தலைமைத்துவத்தின் கீழ் பெண்களுக்கான காற்பந்து பயிற்சிகள் தொடங்கப்பட்ட மூன்றாவது வாரத்திலே  ஏறக்குறைய 145 பெண்கள் பினாங்கு மற்றும் கெடா மாநிலத்தை சேர்ந்தவர்கள்  இதில் பங்கெடுத்தனர். 

“இந்த பயிற்சியில் 16 வயது யுவதி முதல் 53 வயது மகளிர் வரை பங்கேற்பது மிகவும் பிரமிப்பாக இருந்தது. இதில் மூன்று தாய்-சேய் ஜோடிகளும் கலந்து கொண்டுள்ளனர்,” என ஸ்ரீ கூறினார். 

மத்திய செபராங் பிறை இந்திய காற்பந்து சங்கத் தலைவர் சங்கர் மற்றும் ஸ்மார்ட் மோடியுளர் தெக்னோலோஜி சென்.பெர்ஹாட் நிறுவனம் ஆதரவுடன் பெண்களுக்கான காற்பந்து பயிற்சி நடத்த திடல் மற்றும் அரங்கம் வழங்கப்பட்டது. 

அதுமட்டுமன்றி, காற்பந்து பயிற்சியாளர் பேச்சிமுத்து அவர்களும் அல்லும் பகலும் காணாது 145 விளையாட்டாளர்களை பல அணிகளாக பிரித்து பயிற்சிகள் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PIFA சங்கம் தற்போது 24 கிளப்கள் கொண்டு காற்பந்து துறையில் சிகரத்தை நோக்கி பயணிக்கிறது. 

ஸ்ரீ சங்கர்அகம் மகிழ, மலேசிய காற்பந்து சங்கம் (FAM) கீழ் நடைபெற்ற நடுவருக்கான தேர்வில் 
PIFA அணியைச் சேர்ந்த ஏழு இந்திய பெண்களும், அடிப்படை காற்பந்து பயிற்சியில் மூவரும் தேர்வுப் பெற்றுள்ளனர். 

மேலும், PIFA ஒருங்கிணைப்பில் விளையாட்டாளர்கள் ‘Sports Science’ துறையில் மூன்றாம் நிலை தேர்வு மற்றும் 
‘Physiotherapy’ பயிற்சியிலும் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்,  என்றார். 

2020-ஆம் ஆண்டின் துவக்கத்தில், PIFA ஏற்பாட்டில்
பெண்களுக்கான காற்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி மற்றும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி இணை ஆதரவில் நடைபெற்றது. 

மலேசிய காற்பந்து சங்கம்’ ஏற்பாட்டில் ‘துன் ஷாரிப்பா ரோஷியா’ கிண்ண காற்பந்து போட்டியில் PIFA அணி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்பந்து போட்டி வருகின்ற அக்டோபர் மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PIFA அணியினர் பினாங்கு விளையாட்டாளர்கள்; முன்னாள் பினாங்கு காற்பந்து அணி விளையாட்டு வீரர்கள் (மலாய்காரர்கள்); பிற மாநிலத்தை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் உட்பட ஒரு திறன்மிக்க குழுவை உருவாக்க இணக்கம் கொள்வதாகக் கூறினார். 

‘துன் ஷாரிப்பா ரோஷியா’ கிண்ணத்தில் PIFA அணியினர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தற்போது பயிற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை(பி.கே.பி3.0) அமலாக்கத்தால் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நேரடி பயிற்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் இயங்கலை மூலமாக விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சிகள் நடத்தப்படுகிறது, என தெரிவித்தார்.