தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு பாலர்ப்பள்ளி அஸ்திவாரம்- பேராசிரியர்

Admin

அண்மையில், மாநில நம்பிக்கை கூட்டணி அரசு தொடர்ந்து நான்காவது முறையாகப் பினாங்கின் அனைத்துத் தமிழ்ப் பாலர்ப்பள்ளிகளுக்கும் ரிம1 லட்சம் மானியத்தை பகிர்ந்தளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.. இம்முறை மாநில அரசு தமிழ் பாலர்ப்பள்ளிகளுக்குச் சிறப்பு மானியமாக தமிழ்ப்பள்ளிகளுக்கானச் சிறப்பு பணிக்குழுவிடம் ரிம90,000 வழங்கியது. இதுவரையில் மலேசியாவில் எந்த மாநில அரசாங்கமும் பாலர்ப்பள்ளிகளுக்கு மானியம் வழங்கியது கிடையாது என்பது வெள்ளிடமலை. கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநில அரசு பாலர்ப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் ரிம100,000 மானியம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி 27 பாலர்ப்பள்ளிகளுக்கும் அம்மானியத்தைப் பகிர்ந்தளித்தது. இன்னும் பல பாலர்ப்பள்ளிகள் நிதி பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறிந்ததால் இம்முறை இப்பள்ளிகளுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் கண்காணிப்புக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் அன்பழகன் வரவேற்புரையில் கூறினார். இம்முறை கொடுக்கப்படும் மானியத்தைக் கொண்டு பாலர்ப்பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க தமிழ்ப்பள்ளிகள் இணக்கம் தெரிவித்தனர்.

முதல்வருடன் மாநில உயர்மட்டத் தலைவர்களுடன் மானியம் பெற்றுக்கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரையர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்
முதல்வருடன் மாநில உயர்மட்டத் தலைவர்களுடன் மானியம் பெற்றுக்கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரையர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்

கொம்தார் ஏ அரங்கத்தில் நடைபெற்ற இம்மானியம் வழங்கும் நிகழ்ச்சியை மாண்புமிகு பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் தலைமை தாங்கினார். இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் மற்ற பள்ளிகளுக்கு நிகராகச் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளுக்குப் பல நிதியுதவிகளை வழங்கி எல்லா நிலைகளிலும் ஆதரவாக இருந்து வருகிறது என முதல்வர் தம் சிறப்புரையில் கூறினார். இதனிடையே, பாலர்ப்பள்ளி இன்றி இயங்கி வந்த திராண்ஸ்கிரியான் தோட்ட தமிழ்ப்பள்ளியில் மாநில அரசின் முயற்சியில் தற்போது புதிய பாலர்ப்பள்ளி துவங்கப்பட்டிருப்பதைச் சுட்டுக்காட்டினார். இன்னும் சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளியில் பாலர்ப்பள்ளி இல்லாததையும் விரைவில் அதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்கவிருப்பதாகக் கூறினார். இதனிடையே, பாலர்ப்பள்ளியின் ஆதிக்கத்தில்தான் நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க முடியும் என்று தமது உரையில் கூறினார் மாநில முதல்வர் .
அதோடு, பாலர்ப்பள்ளி ஆசிரியர் எதிர்நோக்கும் ஊதியம் பிரச்சனைக்கு தலைமையாசிரியர்கள் மற்றும் தத்தம் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் தீர்வுக்கண்டு அவர்களுக்கு நல்லதொரு ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொண்டார் பேராசிரியர். பினாங்கின் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் நல்லதொரு கற்றல் கற்பித்தல் சூழல் உண்டாக வேண்டும் என்ற உன்னத நோக்கில் வழங்கப்படும் இந்த மானியம் மிகவும் பாராட்டக்குரியதாகும். இந்தியர்களின் தேவைகளும் உரிமைகளும் உயர்ந்த நிலையில் காக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுறுத்தினார். அதற்காக ஆசிரியர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமையினை சரியாகச் செய்ய வேண்டும் என பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.
அத்தினத்தன்று பினாங்கு பஞ்சாபி பள்ளிகளுக்கும் மாநில அரசு ரிம 70,000 மானியமாக வழங்கியது. சீக்கியர்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவு நல்கும் வகையில் இம்மானியம் அமையும் என்பது திண்ணம்.