ஜுரு – சுங்கை ஜுருவில் 25க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றுக்கூடி தூய்மைப்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இவர்கள் மூன்று மணி நேரத்தில் 100 கிலோகிராம் குப்பைகளைச் சேகரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பங்களித்தனர்.
செபராங் பிறை மாநகர் கழகம், செபராங் பிறை ஹாலிடே இன் சூட்ஸ் மற்றும் பினாங்கு ஆக்ஷன் கிளப் ஆகியவற்றால் கூட்டாக தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, உலகத் தூய்மைப்படுத்தும் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது.
ஆறுகளைப் பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆறுகள், பள்ளங்கள் மற்றும் கடலில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுப்பதும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக அமைவதாக என்று செபராங் பிறை மாநகர் கவுன்சிலர் ரேஷல் தே கூறினார்.
“குப்பைகளை சுத்தம் செய்வதில் உள்ள சிரமத்தை, குறிப்பாக ஆறுகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வதில் உள்ள சிரமத்தையும் பங்கேற்பாளர்கள் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பணிகள் மிகவும் சவாலானவை, ஆனால் இது செபராங் பிறையில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மாநகர் கழகத்தின் ஆரஞ்சு வீரர்களின் அன்றாடப் பணியாகும்.”
அதிகாரிகள் ஆற்றை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்வது இது நான்காவது முறையாகும் என்றும், தண்ணீரில் மிதக்கும் குப்பைகளின் அளவு கணிசமாகக் குறைந்து வருவதையும் அவர் தமதுரையில் எடுத்துரைத்தார்.
பங்கேற்பாளர்கள் ஆற்றை சுத்தம் செய்யும் அனுபவத்தை அதிகமான மக்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும், ஆற்றின் குப்பைகளைச் சுத்தம் செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிக தன்னார்வலர்கள் முன் வருவார்கள் என்றும் ரேஷல் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹொலிடே இன் தங்கும்விடுதியின் பொது மேலாளர் வு ஜுன்கியாங் கூறுகையில், இது நிறுவனத்தின் உலகளாவிய “நன்மைக்காகப் பங்களிப்பது” இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது உள்ளூர் சமூகங்களுக்கு உதவுவதையும் நதிப் பாதுகாப்பிற்குப் பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இந்த மாதத்தில் நதி சுத்தம் செய்யும் பணி இரண்டாவது முறையாக நடத்தப்படுகிறது. எங்கள் ஆதரவைக் காட்ட நாங்கள் தொடர்ந்து முனைப்புக் காட்டுவோம். இந்த நடவடிக்கைகள் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நல்லாட்சியின் கருத்துக்களை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
முழுமையான சுற்றுச்சூழல் அமைப்புக்கும் இன்றியமையாத நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கும், உயிர்களுக்கு நீரின் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் புரிந்துகொண்டு அங்கீகரிப்பதை உறுதி செய்வதற்கும் எதிர்காலத்தில் அதிகாரிகளுடன் இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க அவர் கோடிக்காட்டியுள்ளார்.
நதி சுத்திகரிப்பு பிரச்சாரத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் ஜெங் சுவானிங்கை (010-441 7749) தொடர்பு கொள்ளலாம்.