ஜார்ச்டவுன் – இன்றுவரை, பினாங்கு மாநகர் கழகத்தின் (எம்.பி.பி.பி) கீழ் தீவுப்பகுதியில் 254 தனியாருக்குச் சொந்தமான யூனிட்கள் உட்பட மொத்தம் 322 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் (EVCB) நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன.
உள்ளூர் அரசு, நகர்ப்புற மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லாய் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையை 422 ஆக உயர்த்த பினாங்கு மாநகர் கழகம் உறுதிபூண்டுள்ளது, என்றார்.
“மத்திய அரசு நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்கு எம்.பி.பி.பி உறுதிபூண்டுள்ளது,” என்று அவர் இங்குள்ள பண்டார் சுங்கை பினாங்கில் உள்ள பெர்சியாரன் கர்பால் சிங் சாலையில் EVCB நிலையத்தை திறந்த வைத்த பின்னர் அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.
எம்.பி.பி.பி செயலாளர் சியோங் சீ ஹாங் அவர்களும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
நாடு முழுவதும் 10,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவ வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்குக்கு ஏற்ப, எம்.பி.பி.பி நிர்வாகப் பகுதியில் 300 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் உட்பட 600 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவுவதற்கானத் திட்டத்தை மாநில அரசு முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, எம்.பி.பி.பி 60 கிலோவாட் (kW) திறன் கொண்ட 50 சாதாரண சார்ஜர் அலகுகள் (DC) மற்றும் 22kW திறன் கொண்ட இரண்டு வேகமான சார்ஜர் அலகுகள் (AC) நிறுவலின் முதலாம் கட்டத்திற்கான முன்மொழிவு கோரிக்கை (RFP) செயல்முறையை நடத்தத் தொடங்கியுள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த மூய் லாய், இந்த ஆண்டு ஜனவரியில் 52 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அந்த இடத்தில் நிறுவப்பட்டதாகக் கூறினார்.
“மொத்தம் 48 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு 2026, ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கும். மீதமுள்ள நான்கு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் தற்போது தேசிய மின்சார வாரியத்தால் (TNB) எரிசக்தி விநியோகத்தை வழங்க செயலாக்கப்படுகின்றன.
“EVCB பயன்பாட்டிற்கான அனைத்து கட்டணங்களையும் ‘Pearl 2.0’ மற்றும் ‘ChargeSini’ செயலியைப் பயன்படுத்தலாம்,” என்று ஜாவி மாநில சட்டமன்ற உறுப்பினருமான ஜேசன் விளக்கமளித்தார்.
EVCB நிறுவல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் குறித்து, எம்.பி.பி.பி 27 இடங்களில் 106 யூனிட்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியான திட்டம் 2025 டிசம்பரில் நிறைவடையும் என்றும் மூய் லாய் கூறினார்.
“இரண்டாம் கட்டத்தின் கீழ் இதுவரை கட்டி முடிக்கப்பட்டு இயங்கும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை 10 யூனிட்கள் ஆகும்” என்று அவர் இன்று காலை செய்தியாளர்களிடம் பதிலளித்தார்.
அதே வேளையில், எம்.பி.பி.பி தற்போதுள்ள வாகன நிறுத்துமிடங்களை (TLK) EVCB ஆக மாற்றும் என்றும், எம்.பி.பி.பி வளாகப் பகுதிக்கு அருகிலுள்ள வாகனம் நிறுத்தும் இடங்கள் மற்றும் ‘வீதி-பார்க்கிங்’ உட்பட ஏற்படும் மாற்றங்களையும் அவர் அறிவித்தார்.