மலேசிய இந்து சங்கத்தின் சிறந்த தலைமைத்துவத்துக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்

Admin

கெபுன் பூங்கா – “நம்பிக்கை கூட்டணி அரசு இந்நாட்டில் வாழும் பல்லின மக்களின் சமயம், கலை மற்றும் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் வகையில் கடந்த ஆண்டு முதல்  முஸ்லிம் சமயத்தவர் மட்டுமின்றி பிற ஐந்து பிரதான மதத்தினரும் வழிப்பாடு நிறைவேற்றும் பொருட்டு ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை அரசு ஊழியர்கள் தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பெற சுற்றறிக்கையில் பரிந்துரைக்கப்படுகிறது,” என திருமுறை ஓதும் நிறைவுவிழாவில் கலந்து கொண்ட புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஒன் வாய் இவ்வாறு தெரிவித்தார்.

மாநில அரசு கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து 28 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்குவது பாராட்டக்குரியது, என மேலும் தெரிவித்தார். 

புக்கிட் பெண்டேரா இந்து சங்க பேரவையின் ஏற்பாட்டில் 42-வது திருமுறை ஓதும் விழா நகரத்தார் தண்ணீர்மலை ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பதற்கு ஏற்ப மலேசிய இந்து சங்கம் எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவம் கொண்டு செயல்படுவதற்கு அதிகமான இளைஞர்கள் உறுப்பினர்களாகப் பதிவுச் செய்ய அழைக்கப்படுகின்றனர். இந்து சங்கத்தில் வாழ்நாள்  உறுப்பினராக சேர்வதற்கு ரிம100 கட்டணமாக விதிக்கப்படும் வேளையில் தற்போது இளைஞர்களின் பங்களிப்புக்காக ரிம75 மட்டுமே வித்திக்கப்படுகிறது,” என வரவேற்புரையில் புக்கிட் பெண்டேரா வட்டாரப் பேரவை தலைவர் விவேக நாயகன் தர்மன் கூறினார்.

தற்போது இந்து சங்கத்தில் இணைவதற்கு 20 இளைஞர்கள் பதிவுப்பெற்றுள்ளனர் என அகம் மகிழத் தெரிவித்தார்.

இவ்விழாவில் 110 மாணவர்கள் மற்றும் 100 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தனிநபர் மற்றும் குழு முறையில் தேவாரம் ஓதுதல், மேடை பேச்சுப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி என சமயம் மற்றும் கலை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து திருநீறு பூசி பார்ப்பதற்கே வண்ணமயமாகக் காட்சியளித்தனர்.

இந்நிகழ்வில் புலாவ் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டோபர் லீ சுன் கிட், மலேசிய இந்து சங்க துணைத் தலைவர் தேவார நாயகன் சண்முகநாதன், மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் தொண்டர்மணி முனீஸ்வரன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்விழாவில் மலேசிய விளையாட்டுப் போட்டியில்  (சுக்மா) அம்பு ஏய்தும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கம்பேஸ்வரன் மற்றும் அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் தங்கம் வென்ற இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் விருதுகள்  வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.