தெலுக் கும்பார் – மாநில அரசு மற்றும் பினாங்கு மேம்பாட்டுக் கழகம் ஒன்றிணைந்து ஐந்து மாவட்டங்களில் 19 வீடமைப்புத் திட்டம் மேம்பாட்டுப் பணி மேற்கொண்டு வருகிறது. பொதுவாகவே பெரும்பாலான திட்டங்கள் 80% நிர்மாணிக்கப்பட்ட வேளையில் மீதமுள்ள திட்டங்கள் பல்வேறு நிலைகளில் மேம்பாடு கண்டு வருவதாக உள்ளுராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.
எஸ்.பி செல்லையா, கம்போங் ஜாவா, பட்டர்வொர்த் மற்றும் சூரியா ( பத்து காவான்) ஆகிய மூன்று வீடமைப்புத் திட்டங்கள் 2019-ஆம் ஆண்டு மத்தியில் சாவி வழங்கப்பட்டு மக்கள் குடியேறலாம் என தெலுக் கும்பாரில் உள்ள டுவா ரெசிடன்சி வீடமைப்புத் திட்டத்தை காண வருகையளித்தப் போது செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேம்பாட்டு நிறுவனம் கொடுக்கப்பட்ட காலவரையறையில் கட்டுமானப் பணி பூர்த்திச் செய்வது மட்டுமின்றி தரமான கட்டுமானம் நிர்மாணிப்பதையும் மாநில அரசு உறுதிச்செய்யும் என ஜெக்டிப் சுட்டிக்காட்டினார்.
மேலும் மாநில அரசு நிர்மாணிக்கும் வீடமைப்புத் திட்டம் மட்டுமின்றி தனியார் மேம்பாட்டு நிறுவன வீடமைப்புத் திட்டங்களையும் திடீர் சோதனை மேற்கொள்வதன் மூலம் கட்டும், கட்டப்படும் மற்றும் கட்டிக்கொண்டிருக்கும் 80,000 யூனிட் வாங்கும் வசதிக்கு உட்பட்ட வீடுகளின் தரம் நிலைநிறுத்தப்படும் என்றார்.
“2008-ஆம் ஆண்டு முதல் குறைந்த மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகள், வாங்கும் வசதிக்கு உட்பட்ட வீடுகள் என 28,195 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதேவேளையில் 22,065 வீடுகள் பல்வேறு நிலைகளில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பொது மற்றும் தனியார் நிறுவன இணையுடன் 32,212 வீடுகள் கட்ட அனுமதி பெறப்பட்டது,” என கூறினார்.