வட பினாங்கு அறிவியல் பூங்காவில் தொழிலாளர் தங்கும்விடுதி – முதல்வர்.

ஜார்ச்டவுன் – பத்து காவான் வட்டாரத்தில் அமைந்துள்ள பினாங்கு வட அறிவியல் பூங்காவில் 4.9781 ஹெக்கர் நிலபரப்பில் அனைத்துலக தொழிலாளர் தங்கும்விடுதி அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக பினாங்கு மேம்பாட்டுக் கழகம் ‘பயோபோலிஸ் ரிசோசஸ்’ தனியார் நிறுவனத்தை நியமித்துள்ளதை கொம்தாரில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அறிவித்தார்.
இந்த அனைத்துலக தொழிலாளர் தங்கும்விடுதி அமைக்க நான்கு ஆண்டு காலம் தேவைப்படும்; பணி தொடக்கம் ஒப்புதல் (COW) கிடைத்தப்பின்னர் நியமிக்கப்பட்ட நிறுவனம் பணிகளைத் தொடங்கும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

“அருகிலுள்ள தொழில்துறை பகுதிகளில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக இந்த அனைத்துலக தங்குமிட மேம்பாட்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுற்றியுள்ள தொழில்துறை தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளுடன் நவீன வடிவமைப்புடன் குடியிருப்பு பகுதியை வழங்கும் என்று நம்புகிறேன்”, என நில மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கொன் யாவ் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார்.

மேலும், பினாங்கு மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமது பாசிட் மற்றும் ‘பயோபோலிஸ் ரிசோசஸ்’ தனியார் நிறுவனத் தலைவர் டத்தோ பொறியியலாளர் ரிச்சட் ஜோங் இஸ்ட் பூல் ஆகியோர் மாநில முதல்வர் முன்னிலையில் ஓப்பந்த உடன்படுக்கையை பரிமாறிக்கொண்டனர்.

ஐந்து கட்டமாக மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் 12,313 தொழிலாளர்கள் தங்கும் வசதியும் கொண்ட 684 யூனிட் தங்குமிடம், எட்டு அலுவலகம், பொதுப் போக்குவரத்து நிலையம், தொழுகை தலம் மற்றும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்படும் என பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ் தெளிவுப்படுத்தினார்.

மேலும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரி முகமது பாசிட் அதிக மக்கள் வாழும் வீடமைப்புபகுதிகளில் அந்நிய தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாநில அரசின் இந்த புதிய முயற்சி மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். இதனிடையே, இத்திட்டம் தொழில்துறை பகுதியில் அமைக்கப்படுவதன் மூலம் குற்றச்செயல்களை குறிப்பாக அந்நிய தொழிலாளர்களால் நிகழும் குற்றச்செயல்களை களைய முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். ‘பயோபோலிஸ் ரிசோசஸ்’ தனியார் நிறுவனம் பொது-தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் (PPP) மூலம் ரிம250 கோடி முதலீடு செய்துள்ளது பாராட்டக்குரியதாகும்.