பினாங்கில் அதிகமாக தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் நடத்த வேண்டும் – பேராசிரியர்.

பேராசிரியர் ப.இராமசாமி, பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் டாக்டர் வெ.தேவராஜுலு, மலேசியத் தமிழ் நெறி கழக தேசியத் தலைவர் இரா.திருமாவளவன், கவிஞர் சோலை முருகன் மற்றும் சங்க செயலவை உறுப்பினர்கள்.

பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற செந்துறை கவிஞர் சோலை முருகன் இயக்கிய விழா மற்றும் கவிதைப் போட்டிக்கானப் பரிசளிப்பு விழா இனிதே நடைபெற்றது.

பினாங்கு மாநிலத்தில் அதிகமான தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் நடத்த முற்பட வேண்டும். எழுத்தாளர்கள் தரமான இலக்கியத்தை படைப்பதற்கு ஏற்றவாறு தனது வாழ்கையிலும் சிறந்த மாண்பினை பின்பற்றி பொது மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாத் திகழ வேண்டும், என இலக்கிய விழாவினை அதிகாரவப்பூர்வமாகத் தொடக்கி வைத்து பினாங்கு மாநில இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கேட்டுக்கொண்டார்.

தமிழ் வாழ்த்து, தமிழ்க் கலாச்சார நடனம், காதுக்கினிய தமிழ் அறமூட்டும் பாடல்கள், தலைமையுரை, சிறப்புரை, இலக்கிய உரைகள் என்று பல்வேறு அம்சங்களுடன் மிகவும் சிறந்த முறையில் நடந்த இலக்கியத் திருவிழாவில் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு, மிகச்சிறந்த கவிதைகளை புணைந்த 8 கவிஞர்களுக்குப் பாராட்டு, ரொக்கப் பணம், சான்றிதழ், நினைவுச் சின்னம் என்று வழங்கி சிறப்பு செய்யப்பட்டார்கள்.

தேசியக் கீதம், தமிழ் வாழ்த்துடன் தொடங்கிய பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க இலக்கியத் திருவிழாவில், நிகழ்சியின் ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைபாளரும், சங்கத்தின் செயலாளருமான செ.குணாளன் வரவேற்புரையுடன் நிகழ்சியை தொகுத்து வழங்க, சங்கத்தின் தலைவர் டாகடர் வெ.தேவராஜுலு தலைமையுரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள்

பினாங்கு எழுத்தாளர் சங்கத்திற்கு தொடர்ந்து நல்லாதரவி வழங்கி வரும் பேராசிரியர் ப.இராமசாமி அவர்களுக்கு நன்றி மாலை சூட்டினார் அச்சங்கத்தின் செயலாளர் செ.குணாளன்.

பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்கள் முழுக்க முழுக்க இயக்கிய உரையை நிகழ்த்தினர், அந்த வகையில் சங்க பொருளாளர் கு.கிருஷ்ணசாமி உலக வாழ்வியல் நூல் திருக்குறள் என்ற தலைப்பிலும், முருகு மாதவன் மலேசியத் திருநாட்டில் கவிதை இலக்கியம் என்றும் சிறப்பான உரையை ஆற்றினர்.

இறுதியாக தலைநகரைச் சேர்ந்த தனித் தமிழ் வேந்தன் ஐயா இரா.திருமாவளவன் தமிழினத் தொன்மமும் இலக்கிய பெருவளமும் என்ற தலைப்பில் மிக அற்புதமான இலக்கிய உரையை சுவைஞர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் மலேசிய குற்றத் தடுப்பு அறவாரிய பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் டத்தோ புலவேந்திரன், மேஜர் காளீஸ்வரன், கெடா, பினாங்கு, பேரா மாநில பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

புக்கிட் மெர்த்தாஜாம், பண்டார் பெர்டாவில் உள்ள செபராங் பிறை நகராண்மைக் கழகத்தில் பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த செந்துறை கவிஞர் இலக்கிய விழாவில் மண்டபம் நிறைய இலக்கிய கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.