‘முபாலிக்’ பள்ளிகளுக்கு மாநில அரசு மானியம் வழங்கியது

முபாலிக் பள்ளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்வில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பினாங்கு மாநில அரசு திறமையான நிர்வாகத்தினால் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் வருமானத்தை பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாண்டு பத்தாவது முறையாக முபாலிக் பள்ளிகளுக்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கொம்தார் அரங்கத்தில் மானியம் எடுத்து வழங்கினார். இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 22 முபாலிக் பள்ளிகளுக்கு மாநில அரசு ரிம1.18 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளதாக தமதுரையில் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு பள்ளிகளில் புதிய கட்டிடம் அமைத்தல், கால்வாய் சீரமைப்பு, கழிவறை மேம்பாடு என முக்கிய அம்சங்களுக்காக பிரத்தியேகமாக மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, புதிய கட்டிடம் விளையாட்டு தளம், அறிவியல் கழகம், வகுப்பறைகள் அமைத்தல், வேலி போடுதல், மற்றும் இதர மறுசீரமைப்பு திட்டங்களுக்காக இந்த ஆண்டு 22 தேசியப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பினாங்கு மாநில அரசின் பொறுப்பு, ஆற்றல் மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தினால் இம்மானியங்கள் வழங்கும் சாத்தியம் ஏற்படுவதாக தமதுரையில் குறிப்பிட்டார் மாநில முதல்வர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு தேசிய கணக்கறிக்கையில் பினாங்கு மாநிலம் ரிம89.2 கோடி கூடுதல் வருமானத்தை தனது திறமையான நிர்வாகத்தினால் சாத்தியப்படுத்தியுள்ளது என்பது சாலச்சிறந்தது. மேலும், நமது நாட்டிலே பினாங்கு மாநிலம் தான் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர கணக்கறிக்கையை முதல் மாநிலமாக தேசிய கணக்கறிக்கை ஆணையத்திடம் சமர்பிக்கின்றது என்றால் மிகையாகாது.

பினாங்கு மாநிலத்தில் முதலீடு மட்டுமின்றி வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதன் வழி வேலை இல்லா திண்டாட்டம் பினாங்கு மாநிலத்தில் 2%-ஆக குறைந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு ரிம 7.7 பில்லியன் முதலீட்டின் மூலம் 8,162 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.