மத்திய அரசு அல்லது தனியார் நிறுவனத்திற்கு “சிறப்பு சலுகை ” கிடையாது- ஜெக்டிப்

ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் டியோ.

மாநில அரசு விதித்துள்ள மலிவு விலை வீடமைப்புத் திட்ட வழிகாட்டலுக்கு இணங்காத மத்திய அரசாங்கம் அல்லது தனியார் மேம்பாட்டு நிறுவனத்திற்கும் எவ்வித சிறப்பு சலுகைவழங்கப்படாது எனத் திட்டவட்டமாகக் கூறினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ.

பினாங்கு மத்திய செயற்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ ஜைனல் அபிடின் ஒஸ்மான் மலாய் மொழி நாளிதழ் ஒன்றில் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து இவ்வாறு பதிலளித்தார். திரு ஜெக்டிப் கூறுகையில், மாநில அரசு அனைத்து வீடமைப்புத் திட்ட விண்ணப்பங்களையும் சமமான முறையில் தான் வழிநடத்துவதாகவும் ஜைனல் அபிடின் குறிப்பிட்ட வகையில் சிறப்பு சலுகைஎன்பது கிடையாது என கண்டித்து கூறினார்.

வீடமைப்புத் திட்ட வழிகாட்டலில் வித்திக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மட்டுமே விரைவாக மாநில அரசு அனுமதி வழங்குவேன்என்றார். இதற்கு முன்பு ஜைனல் அபிடின் மத்திய அரசாங்க முகவர்களுக்கென சிறப்பு சலுகை வழங்க வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013-ஆம் ஆண்டு தொடங்கி மத்திய அரசின் கீழ் செயல்படும் பினாங்கு கூட்டரசு முன்னேற்ற வாரியம் (பெர்டா) மற்றும் ஜே.கே.பி மேம்பாட்டு நிறுவன சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 15 திட்ட விண்ணப்பங்களும் மாநில வழிகாட்டலை பின்பற்றாத நிலையில் நிராகரிக்கப்பட்டன.

மாநில அரசு சம்பந்தப்பட்ட இரு மத்திய மேம்பாட்டு முகவர்களுடன் நடந்த சந்திப்புக்கூட்டத்தில் மாநில அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர் பெர்டா நிறுவனம் சமர்ப்பித்த 7 திட்ட விண்ணப்பங்களில் மாநில விதிமுறைப் பின்பற்றிய 4 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. மேலும் விலை காரணமாக 2 திட்டங்களும், நில அறிக்கை பெறுவதற்காக ஒரு திட்டமும் மற்றுமொரு திட்டத்தை பெர்டா மீட்டுக்கொண்டதாக திரு ஜெக்டிப் தெளிவுப்படுத்தினார்.

இதற்கிடையில், ஜே.கே.பி நிறுவன கீழ் சமர்ப்பிக்கப்பட்ட 8 திட்டங்களில் 6 திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதாகவும் மீதமுள்ள 2 திட்டங்களில் இருக்கும் அத்துமீறிய வீடுகள் பிரச்சனைத் தீர்க்க ஒத்திவைத்துள்ளதாக டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஜெக்டிப் தெரிவித்தார்.

பினாங்கில் மத்திய அரசு மேற்கொள்ளும் வீடமைப்புத் திட்ட விதிமுறை பிரச்சனைக்கு உதவிக்கரம் வழங்குவேன். மேலும், நாளிதழ் செய்தியில் அறிவித்தது போல பினாங்கில் அதிகமான மலிவு விலை வீடமைப்புத் திட்ட மேற்கொள்ள வரவேற்பதாகவும் அதன் விண்ணப்பங்கள் விரைவாக சமர்ப்பிக்கும் வேளையில் மாநில வீடமைப்புத் திட்ட வழிகாட்டலுக்கு ஏற்ப, மாநில அரசு அனுமதி வழங்க இலகுவாக இருக்கும்என்றார்.