செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகத்தில் (எம்.பி.எஸ்.பி), எட்டு புதிய உறுப்பினர்களுடன் மொத்தம் 24 கவுன்சிலர்கள் ஊராட்சி சட்டம் 1976 (Act 171) பிரிவு 10(1) இன் கீழ் 2026 ஜனவரி,1 முதல் டிசம்பர்,31 வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

2026 நிர்வாகக் காலத்திற்கான பதவிக்காக, அவர்கள் முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மற்றும் எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ படேருல் அமின் அப்துல் ஹமீட் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், தனது உரையின் போது, சம்பந்தப்பட்டவர்களின் நியமனம், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் கொள்கைகளைத் திறமையாகவும் நேர்மையுடனும் நிறைவேற்றுவதில் ஒரு பெரிய நம்பிக்கையாக இருப்பதாக விவரித்தார்.
“கொள்கைகளைச் செயல்படுத்துவதிலும், மக்களை அணுகுவதிலும், அடிமட்ட சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளூர் அரசாங்க நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றனர்.
“துரித வளர்ச்சிக் காணும் டிஜிட்டல் சகாப்தத்தில், கவுன்சில் உறுப்பினர்கள் எப்போதும் உள்ளூர் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதில் செயல்திறன், பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்,” என்று அவர் எம்.பி.எஸ்.பி கட்டிடத்தில்.நடைபெற்ற எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்கள் பதவி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான கொன் இயோவ், 2026 ஆம் ஆண்டிற்கு, பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வை மற்றும் சிவில் மலேசியா கட்டமைப்பிற்கு ஏற்ப, நிதி மீள்தன்மை மற்றும் மாநில வருவாயை வலுப்படுத்துவதில் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று வலியுறுத்தினார்.
கூடுதலாக, 2026 மத்திய வரவு செலவு திட்டத்தின் மூலம் ஜூரு-சுங்கை டுவா போக்குவரத்து திட்டம் (PTJSD) வரவேற்கத்தக்கது என கூறினார்.
“இந்தத் திட்டம் செபராங் பிறையில் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைத்து பொருளாதார இயக்கத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, எம்.பி.எஸ்.பி மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் செபராங் பிறை போக்குவரத்து திட்டத்தை விரிவாக வகுத்து செயல்படுத்த வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், வட செபராங் பிறை குடியிருப்பாளர்களின் நலனுக்காக, எம்.பி.எஸ்.பி இன் சொத்துடைமையாக இருக்கும்
பெர்தாம் விளையாட்டு வளாக மேம்பாட்டுத் திட்டமும் அதில் கவனம் செலுத்தப்பட்டு நன்கு பராமரிக்கப்பட வேண்டும் என்று கொன் இயோவ் கூறினார்.
அதே விழாவில், 2025ஆம் ஆண்டில் தங்களது பதவிக் காலத்தை முடித்த எட்டு முன்னாள் கவுன்சிலர்கள் வழங்கிய பங்களிப்பு மற்றும் சேவைக்காக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) மேயர் டத்தோ
படேருல் அமின் அப்துல் ஹமீட்
மற்றும் ஊராட்சி, நகர் & புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜாவி சட்டமன்ற உறுப்பினருமான ஜேசன் ஹெங் மூய் லாய் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் எம்.பி.எஸ்.பி கவுன்சிலராக நியமிக்கப்பட்ட எட்டு புதிய உறுப்பினர்களில், மூவர் ஜனநாயக செயல் கட்சி (DAP) சார்பாக லிண்டா என் கெர் வேய், டான் சீ தீயோங் மற்றும் கே. யோகன்ராஜ் தேவர் ஆவார்.
மேலும், மூவர் மக்கள் நீதிக் கட்சி (PKR) சார்பில் ஹஸ்ருல் ஹுசின், அமாட் ரிஜால் அப்துல் ஹமிட் மற்றும் அனுவார் யூசோப். இரண்டு பேர் அம்னோவைச் சேர்ந்த டத்தோ முஹாமட் ஸைடி சைத் மற்றும் அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த சாங் கிம் ஜூ இடம்பெறுகின்றனர்.
இது புதிய நியமனமாகத் தோன்றினாலும், அக்மட் ரிஜால், அன்வார் மற்றும் கிம் ஜூ ஆகியோர் இதற்கு முந்தைய காலங்களில் ஏற்கனவே உள்ளூராட்சி நிர்வாகத்தில் கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.