தெலுக் பஹாங் – வருகின்ற மார்ச்,2 அன்று பினாங்கின் தெலுக் பஹாங்,
ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தில் கொண்டாடப்படும் மாசி மக தெப்ப விழாவின் போது எந்த வகையான செயற்கை நுரைப்பம் பொருட்கள் அல்லது நெகிழி தட்டுக்களை பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு கேட்டுக் கொண்டார்.
இத்திருநாள் பங்கோர் தீவு, ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய மாசி மகத் தெப்ப திருவிழா விடுத்து மிக விமரிசையாக பினாங்கில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவைக் காண மலேசிய முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையளித்து ஆண்டுதோறும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்த விழாவின் போது, சிங்க முக காளியம்மனை சுமந்து செல்லும்
மிதக்கும் தேர் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கடலில் பவனி வருவதற்கு அழைத்துச் செல்லப்படும்.
பாரம்பரியமாக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரத யாத்திரையின் போது, பக்தர்கள் கடலில் மிதக்க அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை மிதக்க விடுவர்.

“எனவே, பக்தர்கள் இயற்கையாக சிதைவடையும் (Biodegradable) பொருட்களான வெற்றிலை தட்டுகள், இலைகளால் செய்யப்பட்ட உமி தட்டுக்கள் மற்றும் விளக்குகளை ஏற்றி வைக்க வாழை மரத்தின் தண்டுகள் போன்ற பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தட்டுக்களில் விளக்குகளை ஏற்ற தேர்வு செய்யுங்கள்,” என டத்தோ ஸ்ரீ சுந்தராஜு வலியுறுத்தினார்.

எனவே, இந்த அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை மிதக்க வைப்பதற்கு ஸ்டைரோஃபோம் (Styrofoam) என்ற நுரைப்பம் மற்றும் பாலிஸ்டிரீன் (Polystyrene) போன்ற நெகிழிப் பொருட்களில் தயாரிக்கப்பட்ட தட்டுகளை பக்தர்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது என சுந்தராஜு நினைவுறுத்தினார். இரண்டாவது ஆண்டாக பசுமையான மாசி மக தெப்ப திருவிழாவை அனுசரிப்போம் என கேட்டுக்கொண்டார்.
மேலும், பினாங்கு பசுமை கழகத்தின் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு அன்றையத் தினம் 2,000 மறுசுழற்சி பை விநியோகிக்கப்படும் என அறிவித்தார்.
“கடல் மாசுபாட்டைத் தடுக்கவும், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தடுக்கவும், பக்தர்கள் விளக்குகளுக்கு ஸ்டைரோஃபோம் என்ற நுரைப்பம் அல்லது எந்த வகையான பாலிஸ்டிரீன் அல்லது நெகிழி அடிப்படையிலான பொருட்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி மற்றும் பிரச்சார அமைப்பாளர், என்.வி சுப்பாராவ்
தெரிவித்தார்.
பொது மக்கள் பசுமையை முன்னிறுத்தி தெப்ப திருவிழாவைக் கொண்டாட வேண்டும். அதேவேளையில், பக்தர்கள் தங்களின் தங்க ஆபரணங்களின் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளுமாறும் ஆலயத் தலைவர் அ.கணபதி கேட்டுக்கொண்டார்.
மாநில அரசின் பசுமையான மாசி மக தெப்ப திருவிழா கொண்டாட்டத்திற்கு மலேசிய இந்து சங்க பினாங்கு மாநிலப் பேரவை என்றும் பேராதரவு வழங்குகிறது என அதன் தலைவர் விவேக ரத்னா தர்மன் தெரிவித்தார்.
தெலுக் பஹாங்கில் உள்ள 129 ஆண்டுகள் பழமையான சிங்கமுக காளியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் வருடாந்திர மிதக்கும் தேர் ஊர்வலம், ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் ஒரு கடலோர விழாவாகும், என்றார்.