பசுமை மிக்க பினாங்கு மாநிலத்தை உருவாக்க மரங்கள் நடுவோம் – பேராசிரியர்

Admin

பிறை – ” பினாங்கு மாநில அரசின் தூய்மை, பசுமை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் பசுமையை மேம்படுத்தும் நோக்கில் ‘செபராங் பிறை வருடாந்திர  மரம் நடும் திட்டம்’ அமல்படுத்தப்படுகிறது ,” என இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி இவ்வாறு தெரிவித்தார்.

பிறை தொழில்துறை பகுதியை பசுமை மிக்க வட்டாரமாக உருவாக்கம் செய்யும் பொருட்டு இத்திட்டம் தொடர்ந்து நடத்தப்படுகிறது என பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

இத்திட்டம் பிறை சட்டமன்ற சேவை மையம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக இணை ஏற்பாட்டில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இத்திட்டம் நடத்தப்படுகிறது .

இந்நிகழ்வில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் ஜேசன் ராஜ், தென் செபராங் பிறை மாவட்ட அலுவலர் கமாருல் ஹைய்சால் கொடெராட், தாமான் இண்டாராவாசே சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்றக் கழகத் தலைவர் டத்தோ இங் ஊய் லாய், சாய் லெங் பார்க் தலைவர் துரைசிங்கம் மற்றும் வட்டார பொது மக்கள் கலந்து கொண்டனர்.

பிறை சட்டமன்ற சேவை மையம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக நிதி ஒதுக்கீட்டில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன என நகராண்மைக் கழக உறுப்பினர் டேவிட் மார்ஷல் கூறினார். இந்த ஆண்டுக்கான மரம் நடும் திட்டத்தில் hujan-hujan’ எனும் வகையைச் சேர்ந்த 70 மரங்கள் லோரோங் பெருசாஹான் 4, சாலை ஓரங்களில் நடப்பட்டன. இத்திட்டத்திற்கு பிறை சட்டமன்ற அலுவலகத்திலிருந்து ரிம12,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என மேலும் கூறினார்.