பினாங்கில் 240 ஆண்டுகளாக தைப்பூசம் கொண்டாடுவதை முன்னிட்டு ரிம240,000 நன்கொடை – முதலமைச்சர்

Admin
img 20260201 wa0179

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் 240வது ஆண்டாக தைப்பூச திருவிழா சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதனை முன்னிட்டு, தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு ரிம240,000 நன்கொடை வழங்கப்படும் என மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அறிவித்தார்.

img 20260201 wa0187
நிதி, பொருளாதார மேம்பாடு, நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான மேதகு சாவ், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி தேவஸ்தானத்தில் நடைபெற்ற 2026 தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, இந்த நன்கொடை அறிவிப்பை தெரிவித்தார்.

img 20260201 wa0160
பினாங்கில் 240 ஆண்டுகளாக தைப்பூச கொண்டாட்டத்தை ஏற்று நடத்தும் வெற்றியைக் கொண்டாடும் நோக்கில் ரிம240,000 நன்கொடை வழங்கப்படுகிறது,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினரும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் விளக்கமளித்தார்.
img 20260201 wa0185
மேலும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு (PHEB) ஆண்டுதோறும் ரிம2 மில்லியன் மானியம் விநியோகிக்கப்படுவதன் மூலம், இந்து சமூகத்தின் நலனுக்கான மாநில அரசின் அர்ப்பணிப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
img 20260201 wa0188
வருடாந்திர மானியமாக ரிம2 மில்லியன் வழங்கப்படுவது சமூக மேம்பாடு, மனித மூலதன வளர்ச்சி மற்றும் மாநிலத்தில் இந்து சமூகத்தின் நல்வாழ்வை வலுப்படுத்துவதுடன், வழிபாட்டுத் தலங்களின் நலனைப் பாதுகாப்பதற்கான அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
img 20260131 wa0143

மேலும், தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து கருத்துரைத்த அவர், சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, “மக்களை நகர்த்தும்” (people-moving) கட்டுமானத் திட்டம் தற்போது புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக கூறினார்.
20260201 175228

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (OKU), ஆலயத்திற்குச் செல்லும் வசதியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

img 20260201 wa0178
மேலும், இதுவரை தொடர்புடைய நிறுவனங்கள், அடுத்த கட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக பரிசீலனை மற்றும் மேலதிக ஆய்வுகளுக்காக பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு (PHEB) மூன்று வடிவமைப்பு தேர்வுகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தைப்பூச ஊர்வலம் பினாங்கில் உள்ள 16 பண்பாட்டு பாரம்பரிய அம்சங்களில் ஒன்றாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விளக்கமளித்த அவர், அந்த அங்கீகாரத்திற்கான பிரகடன வர்த்தமானி (Warta Perisytiharan) மாநில சட்ட ஆலோசகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் அதிகாரப்பூர்வ வர்த்தமானி வெளியீட்டிற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஊர்வலத்தை மாநில பாரம்பரியமாக உயர்த்த மாநில அரசு முன்முயற்சி எடுத்துள்ளது. இது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நோக்கத்திற்காக மட்டுமல்லாது, பினாங்கிற்குள் மற்றும் வெளியேயுள்ள பன்முக சமூகத்தினரிடமும் இதனை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என அவர் விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில், பினாங்கு இந்து அறப்பணி வாரிய (PHEB) தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் உரையாற்றினார்.

இந்த தைப்பூசக் கொண்டாட்டத்தை சிறப்பாக நடைபெற அயராது உழைத்து கொண்டிருக்கும் ஆலய நிர்வாகத்தினர், தன்னார்வலர்கள், இந்து அறப்பணி வாரிய ஆணையர்கள் அனைவருக்கும் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

தண்ணீர்மலை ஆலய வளாகத்தில் சமூக மண்டபம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இராயர் தெரிவித்தார்.

மேலும், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் மற்றும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் ஹுய் யிங்; தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன்; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் குமாரதிரவியம் காசிநாதன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.