ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில சட்டமன்றத்தின் 15ஆவது சட்டமன்றத்தின் நான்காவது தவணையின் முதல் கூட்டத்தில், முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் முன்வைத்த தீர்மானத்தின் அடிப்படையில், டத்தோ ஸ்ரீ பேராசிரியர் டாக்டர் நூர் இனாயா யாகூப் மற்றும் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் மக்களவை செனட்டர்களாக நியமிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள், கூட்டரசு அரசியலமைப்பின் Article 45(1)(a) பிரிவின் கீழ் இடம்பெறுகிறது. இதன் நோக்கம், பினாங்கின் நலன்களும் குரலும் கூட்டரசு மட்டத்தில் தொடர்ந்து ஒலிக்கப்படுவதை உறுதி செய்வதாகும்.
இரு நியமனர்களும் நேர்மை, அனுபவம் மற்றும் அவர் தம் துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள் என்றும், பினாங்கின் நலன்களை கூட்டரசு மட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்கக் கூடியவர்கள் என்றும் சாவ் தெரிவித்தார்.
“இந்த நியமனங்கள் மூலம், நாட்டின் கொள்கை வடிவமைப்பில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க நம்பகமான நபர்களால் பினாங்கு தொடர்ந்து பிரதிநிதித்துவம் பெறும்,” என்றார்.
இதனிடையே, 39 வயதான டாக்டர் லிங்கேஸ்வரன், மருத்துவத் துறையிலும் சமூக சேவையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளவர். அவர் 2011ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (MBBS) பட்டம் பெற்றார். பின்னர், டைலெர்ஸ் பல்கலைகழகத்தில்
சுகாதாரம் மற்றும் மருத்துவ சட்டம் துறையில் சட்ட முதுகலைப் பட்டமும், 2022ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சுகாதார மேலாண்மை மற்றும் தலைமை துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
முன்னதாக, சுகாதார அமைச்சின் சுங்கை பாக்காப் மருத்துவமனையில் இயக்குநராகவும் பணியாற்றினார். பின்னர், 2023ஆம் ஆண்டு முதல் முறையாக செனட்டராக நியமிக்கப்பட்டார்.
2023 மார்ச் முதல் 2026 மார்ச் வரை செனட்டராக இருந்த காலத்தில், பொதுச் சுகாதாரம், மருத்துவ பணியாளர்களின் நலன், கல்வி மற்றும் மாநில முன்னேற்றம் ஆகிய அம்சங்களை அவர் தொடர்ந்து மக்களவையில் குரல் எழுப்பினார்.
மேலும், ஆசிய பசிபிக் நாடாளுமன்ற மன்றம் போன்ற பிராந்திய அளவிலான நிகழ்ச்சிகளில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
அதோடு, 2023ஆம் ஆண்டு முதல் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவராகவும், பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக்குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
57 வயதான பேராசிரியர் டாக்டர் நூர் இனாயா, பினாங்கில் பிறந்தவர். அவர் நிபோங் திபாலில் உள்ள மெத்தடிஸ் தேசியப்பள்ளி மற்றும் பினாங்கில் உள்ள அல்-இர்சாட் சமயப்பள்ளியில் கல்வி பயின்றார்.
பின்னர், மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர், LLB (Hons) மற்றும் LLB ஷரியா (Hons) ஆகிய இரு பட்டங்களையும் பெற்றுள்ளார்.
அதன் பின்னர், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டமும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
தமது தொழில்வாழ்க்கையில், அவர் கோலாலம்பூர், இன்பிராதெக்ஸர் பல்கலைக்கழகத்தில் தலைவர் மற்றும் துணைவேந்தராகவும், கூட்டரசு பிரதேசத்தின் இஸ்லாமிய சமய மன்றத்தின் அனைத்துலக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், மலேசிய தேசிய பல்கலைகழகத்தின் சட்ட பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
சட்டம், நிர்வாகம், இஸ்லாமிய நிதி மற்றும் ஷரியா துறைகளில் அவருடைய நிபுணத்துவம் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மலேசிய இஸ்லாம் வங்கி, அமானா ராயா பெர்ஹாட் மற்றும் மலேசிய யாயாசான் வகாஃப் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல தேசிய நிதி நிறுவனங்களுக்கு ஷரியா ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
மாநில அளவில், பினாங்கு மாநில ஃபத்வா குழுவில் பணியாற்றும் ஒரே பெண் உறுப்பினராகவும் அவர் திகழ்கிறார். அதேவேளையில், பினாங்கு இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை, பினாங்கு ஹலால் இன்டர்நேஷனல் மற்றும் பல இஸ்லாமிய சமூக மேம்பாட்டு அமைப்புகளிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், சிலாங்கூரில் ஒரு பள்ளிவாசல் நிறுவனத்தின் முதல் பெண் நாசிர் (Nasir) என்ற வரலாற்றையும் படைத்துள்ளார்.