புக்கிட் குளுகோர் தொகுதியில் 500 மாணவர்களுக்குப் பற்றுச்சீட்டு

Admin
ea1ddf3e e221 42ad 86e3 13e48fe0a2b9

ஜார்ச்டவுன் – புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஐந்நூறு மாணவர்களுக்கு ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ எனும் திட்டத்தின் கீழ் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இந்த மாதம் தொடங்கவிருக்கும் புதிய பள்ளித் தவணையை முன்னிட்டு புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் இத்திட்டம் நடத்தப்பட்டது.

 

ஆயர் ஈத்தாம் தொகுதியில் 300 மாணவர்களுக்கும், பாயா தெருபோங் சட்டமன்ற தொகுதியில் 130 மாணவர்களுக்கும் மற்றும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற தொகுதியின் 70 மாணவர்கள் என புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் அமைந்திருக்கும் இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் வழங்கப்பட்டன என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் இவ்வாறு கூறினார்.

 

“பள்ளிப் பருவம் தொடங்குவதற்கு முன்னதாகவே, வசதிக் குறைந்த மாணவர்களுக்குப் பள்ளிச் சீருடைகள் மற்றும் பள்ளிப் பைகள் மற்றும் காலணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கான வருடாந்திர முன்முயற்சி திட்டமாக இது அமைகிறது.

 

“எதிர்வரும் ஆண்டுகளில் இந்த முன்முயற்சி திட்டத்தை தொடர்ந்து வழிநடத்த  உத்தேசித்துள்ளேன். கல்வி வளர்ச்சிக்கும் மாணவர்களின் அத்தியாவசிய கல்வித் தேவைகளுக்கு ஆதரவளிக்கிறேன்,” என்று அவர் அண்மையில் பாயா தெருபோங் சந்தை மண்டபத்தில் நடைபெற்ற மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பற்றுச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார்.

 

“வசதிக் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டு வழங்குவதன் மூலம் பெற்றோர்களின் சுமையைக் குறைக்க முடிகிறது,” என்றார்.

 

இந்தப் பற்றுச்சீட்டுகள் கொண்டு மாணவர்கள் பள்ளிச் சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள் மற்றும் இதர உபகரணப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம்.

 

இந்த நிகழ்ச்சியில் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் எங் மற்றும் ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் கோனி டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.