மாநில வருவாய் அதிகரிக்க கைவிடப்பட்டப் பகுதிகளை மீண்டும் மேம்படுத்த வேண்டும் – முதல்வர்

Admin

 

ஜார்ச்டவுன் –  பினாங்கு மாநில அரசு மாநில வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் முற்றிலும் கைவிடப்பட்ட பகுதிகளை மீண்டும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

மாநில முதல்வர் சாவ் கொன் யாவ்,  தீவின் கரையோரப் பகுதிகள் மற்றும் வட செபராங் பிறை மாவட்டம் அருகிலுள்ள பட்டர்வொர்த் உள்ளிட்ட பல இடங்கள் இந்த நோக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“ஆரம்பக் கட்டத்தில், ஜார்ச்டவுனுக்கு அருகிலுள்ள வெல்ட் ஸ்குவேயில் உள்ள பகுதியை, புத்தாக்க டிஜிட்டல் மாவட்டம் (சி.டி2) திட்டத்தின் கீழ்
ஜார்ச்டவுன் மத்திய வணிகம் மற்றும் படைப்பு, தொழில்நுட்ப வளாக உருமாற்றம் திட்ட ஒருங்கிணைப்பில்  செயல்படுத்தப்படும்.

“மேலும், லெபோக் பந்தாயைச் சுற்றியுள்ள உலக பாரம்பரிய தளத்தை ‘k-ekonami’ (அறிவு அடிப்படையிலான பொருளாதாரம்) உருவாக்குவதற்கான மையமாக மாற்றும் கட்டமைப்பு திட்டத்தையும் செயல்படுத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது.

“எனவே, CD2-ஐ நிறுவும் குறிக்கோளுடன், 5G இணைய தரவு போன்ற அனைத்து தொடர்புடைய வசதிகளையும் இந்த மாவட்டத்தில் விரிவுப்படுத்துவதை மாநில அரசு உறுதி செய்யும்,” என்று பினாங்கு மாநில சட்டமன்றத்தில் முதல்வர் இவ்வாறு கூறினார்.

14வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் நான்காவது தவணையில் இரண்டாவது கூட்டத்தில் ஆயிர் புத்தே சட்டமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கின் கேள்விக்கு  பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனைத்துலக தரத்தின் புதிய வளர்ச்சியை மாநில பொது மக்கள் அனுபவிக்கும் வகையில், அரசு-தனியார் கூட்டமைப்பு அடிப்படையில் மேலும் பல திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இதன் மூலம், பினாங்கு மக்கள் குறுகிய காலத்தில் புதிய தொழில்நுட்பக் கூறுகளுடன் புதிய வளர்ச்சி அனுபவிக்க முடியும்.

“மாநில அரசின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, குத்தகை காலாவதியான பிறகு, சம்பந்தப்பட்ட திட்டத்தை தனியார் துறையினர் எந்தச் செலவினவும் இல்லாமல் திருப்பித் தர வேண்டும்,” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ் விளக்கினார்.

இது தொடர்பான விவகாரத்தில், மாநில அரசு பைராம் அருகிலுள்ள பத்து கவான் தொழில்துறை பார்க் 2-ஐ (பி.கே.ஐ.பி 2)  புதிய தொழில்துறையாக  மாற்ற திட்டமிட்டுள்ளதாக சாவ் தெரிவித்தார்.

“200 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட
முதல் கட்ட தொழில்துறை தளத்தைத் தயாரிப்பதற்கான நில மீட்புப் பணிகள் ஜூன்,2020 இல் தொடங்கப்பட்டு 2023-இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பிரதான உள்கட்டமைப்புப் பணிகள் கட்டுமானம் செயல்படுத்தும்  முன் குத்தகைக்கு  விட திட்டமிடப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் விளக்கினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த முதல்வர், தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிவேக பிராட்பேண்ட் இணைய தரவை வழங்குவது உட்பட, முதலீட்டாளர்களை BKIP 2 மற்றும் கிழக்கு பத்து காவானுக்கு ஈர்க்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“விவேக நகரம் மற்றும் பாதுகாப்பின் கூறுகளின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்ட தொழில்துறை பூங்கா என்ற கருத்துடன் ஒரு தொழில்துறை பகுதியை உருவாக்குவோம்,” என்று அவர் கூறினார்.

மாநில வருவாயை அதிகரிக்க மாநில அரசு வரி அல்லாத வருவாய் மற்றும் வருவாய் அல்லாத பங்களிப்பில் கவனம் செலுத்துகிறது என்று விளக்கினார்.

இந்த ஆண்டு மாநில அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட வருவாயின் மிகப்பெரிய பங்களிப்பு  வரி அல்லாத வருவாயில் ரிம406.00 மில்லியன்  பெற்றதன் மூலம் காண முடிகிறது, என்றார்.

“இந்த ஆண்டு, மாநில அரசு நவம்பர் 30, 2021 நிலவரப்படி ரிம617.38 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இது இந்த ஆண்டு மதிப்பீட்டை விட ரிம111.36 மில்லியன் அல்லது 22 சதவீதம் அதிகமாகும்.

“ரிம406.00 மில்லியன் அல்லது 65.76 சதவிகிதம் வரி அல்லாத வருவாயாகவும், அதே சமயம் வரி வருவாய் ரிம129.89 மில்லியன் அல்லது 21.04 சதவிகிதம் மட்டுமே பெறப்படுள்ளது.

“வருவாய் அல்லாத பங்களிப்பு ரிம81.50 மில்லியன் அல்லது மொத்த வசூலில் 13.20 சதவிகிதமாகும்,” என்று சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் யூசாஃப் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இதற்கிடையில், தற்போது பினாங்கு மாநிலத்தில் நில வரி மற்றும் தற்காலிக மனைகள் அல்லது ‘பெத்தா’ வரியை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் சாவ் அறிவித்தார்.

“இப்போது பயன்படுத்தப்படும் நில வரி விகிதம் 1994 இல் திருத்தப்பட்ட விகிதமாகும், அதன் அமலாக்கம் ஜனவரி 1, 1996 இல் தொடங்கியது. அதன் பிறகு, வரி விகிதம் 26 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டாலும் இதுவரை வரி திருத்தம் செயல்படுத்தப்படவில்லை,” என்று அவர் விளக்கினார்.