ஜார்ச்டவுன் – தொழில்முனைவோருக்கு எளிதான, விரைவான மற்றும் விரிவான முறையில் வணிக மூலதன நிதியுதவி வழங்கும் தொழில்முனைவோருக்கான பொருளாதார நிதியம் (தெக்கூன்) அமைப்பின் முயற்சியை மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பாராட்டினார்.
இன்று லெபுஹ் பினாங்கில் உள்ள லட்சுமி ஸ்டோர் உரிமையாளர் டி.அரவிந்தனுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் உடன் இணைந்து ரிம70,000 மதிப்பிலான தெக்கூன் நிதியுதவியை வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்த நிதியுதவி இளம் தொழில்முனைவோரின் வணிகத்தை மேலும் விரிவுபடுத்தும் கனவை நனவாக்கும் என நம்புகிறேன்.
“பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அரவிந்தன் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டார். பின்னர் ஏற்பட்ட விபத்து காரணமாக தனது பாதையை மாற்றி இந்தக் கடையைத் தொடங்கியதாகக் கூறினார்.

“ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பின் மூலம் இன்று தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நிலைக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். அவர் கடையின் அருகாமையில் உணவகத்தையும் தொடங்கியிருப்பது அவரது முயற்சி மற்றும் போராட்ட மனப்பான்மையை காட்டுகிறது,” என்றார்.
இதற்கிடையில், தெக்கூன் தேசிய அமைப்பு ரிம70,000 நிதியுதவியை 4 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கியுள்ளதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

அரவிந்தன் கூறுகையில், தெக்கூன் நிதியுதவி விண்ணப்ப செயல்முறை மிகவும் எளிதானது என்றும், சுமார் ஆறு நாட்களில் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“நிறுவனப் பதிவு (SSM), வங்கி அறிக்கை மற்றும் அடையாள அட்டை போன்ற குறைந்த அளவிலான ஆவணங்களே தேவைப்பட்டதாகவும், குறைந்த வட்டி விகிதம் தொழில்முனைவோருக்கு உதவியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.