அடுக்குமாடி வீடு ஒன்று தீக்கிரையானது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மதிப்பிற்குறிய ஜெக்டிப் சிங் உதவி

ஜாலான் பேராக்கில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ தஞ்சோங் அடுக்குமாடி வீடு ஒன்று கடந்த ஜூன் 26ஆம் திகதி காலை 7 மணியளவில் தீப்பிடித்து எரிந்ததில் வீடு முழுமையும் சேதமுற்றது. சம்பவம் நடந்த போது வீட்டு உரிமையாளரான திரு லிம் கொக் யொங்கும் அவரின் மனைவி யோ சூக் லியனும் வீட்டின் பெரிய அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக திரு லிம் தெரிவித்தார். வீடு புகை மூட்டமாக இருந்ததைத் தொடர்ந்து ஏதோ கருகும் வாடை வந்ததை உணர்ந்த மனைவி யோதான்  தீப்பிடித்துவிட்டதன்று அலறியபடி தன்னையும் தன் இளைய மகள் லிம் சியு லிங்கையும் எழுப்பியதாக திரு லிம் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

திருமதி யோவின் அலறலைக் கேட்டு எழுந்தவுடன் உடனே மூவரும் முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் அண்டைவீட்டார் கொடுத்த தகவல் தெரிந்து தீயணைப்புப் படையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் திரு லிம் மேலும் கூறினார். தீயணைப்பு வீரர்கள் தீ அருகில் உள்ள மற்ற வீடுகளுக்குப் பரவாமல் தடுத்து உடனே தீயை முழுமையாக அணைத்தனர். எனினும், வீட்டில் உள்ள பொருட்கள் யாவும் தீயில் கருகிவிட்டன என்று மனவருத்ததுடன் தெரிவித்தார். தீப்புகையால் மூச்சடைப்பு ஏற்பட்ட திருமதி யோ பினாங்கு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கெர்னி டிரைவில் மீ வியாபாரம் செய்து வரும் திரு லிம்மிற்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த மகள் கோலாலும்பூரில் பணிபுரிந்து வருகிறார். பட்டதாரியான 29வயது நிரம்பிய லிம் சியு ஹூனின் பல்கலைக்கழகச் சான்றிதழ்களும் தீயில் கருகியது குறிப்பிடத்தக்கது. வீட்டின் சிறிய அறையில் உள்ள குளிர் சாதனக் கருவியில் ஏற்பட்ட மின்சாரக் கோளாரினால் இத்தீ விபத்து ஏற்பட்டிருக்ககூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சம்பவத்தை அறிந்த டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குறிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அவ்வீட்டு உரிமையாளர் திரு லிம்மைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மாநில ஆளுநரின் அவசரக்கால உதவி நிதியான 500 ரிங்கிட்டை வழங்கினார். மேலும், தம் தொகுதி நிதியிலிருந்து 5000 ரிங்கிட்டை வழங்கவிருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இச்சம்பவத்தைப் பற்றி கருத்துரைத்த திரு ஜெக்டிப், இத்தீ விபத்தால் பொருட்சேதம் ஏற்பட்டிருந்தாலும் எந்தவோர் உயிர்சேதமும் ஏற்படாததை எண்ணி ஆறுதல் அடைவதாகக் கூறினார். அதுமட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு மாநில சமூகத் துறையிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுத் தர முனைவதாகவும் தெரிவித்தார்.

டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் திரு லிம் கொக் யொங்கிற்கு உதவி கரம் நீட்டுகிறார்
டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ அவர்கள் திரு லிம் கொக் யொங்கிற்கு உதவி கரம் நீட்டுகிறார்