இரகசிய கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் – சாவ் கொன் யாவ்

Admin
பினாங்கு மாநகர் கழக இரகசிய கேமராக்கள் கண்காணிப்பு அறை
பினாங்கு மாநகர் கழக இரகசிய கேமராக்கள் கண்காணிப்பு அறை

பினாங்கு மாநிலத்தை பாதுகாப்பு, தூய்மை, பசுமை மற்றும் ஆரோக்கியமான மாநிலமாக உருமாற்றும் திட்டத்தில் மாநில அரசு பல அரிய முயற்சிகளை கையாண்டு வருகிறது. இதில் பினாங்கு மாநகர் கழகத்துடன் இணைந்து இரகசிய கண்காணிப்பு கேமராக்களை பினாங்கு தீவில் அதிகரித்துள்ளன என கொம்தாரில் இரகசிய கேமரா கண்காணிப்பு அறையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசினார் உள்ளூர் அரசு, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.
பினாங்கு மாநகர் கழகத்தின் கீழ் இயங்கும் 318 இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் இருந்து ஆங்காங்கே நடைபெறும் குற்றச்செயல், சாலை விதிமீறல், சாலை விபத்து, சாலை நெரிசல், சட்டவிரோத குப்பை எறிதல், போன்ற நடவடிக்கைகளைக் கண்கணிக்க பிரத்தியேகமாக 10 மாநகர் கழக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோதமாக கார் நிறுத்தும் ஓட்டுநர்களுக்கு இக்கண்காணிப்பு கேமராவில் உள்ள ஒலிபெருக்கி மூலம் தகவல் அளித்து அக்காரை தகர்த்த நினைவுறுத்துவர். அக்காரை அப்புறப்படுத்த மறுக்கும் கார் ஓட்டுநர்களுக்கு சம்மன் வழங்கப்படும். இவ்வாண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரை 58 சம்மன் இந்நடவடிக்கையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது என பினாங்கு மாநகர் கழக செயலாளர் பொறியியலாளர் அங் எங் தாய் கூறினார்.
இதனிடையே, வருகின்ற ஆகஸ்டு மாதம் மேலும் 216 இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பினாங்கு தீவுப் பகுதியில் பொருத்தப்படவுள்ளன. ஆகவே, இவ்வாண்டு இறுதிக்குள் பினாங்கு தீவில் மட்டும் மொத்தமாக 534 இரகசிய கேமராக்கள் ரிம 38.3 மில்லியன் செலவில் பினாங்கு மாநகர் கழகம் பொருத்தும் என தெளிவுப்படுத்தினார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். பினாங்கு மாநில உருமாற்றும் இலக்கை அடைய இன்னும் அதிகமான இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாநில அரசு இலக்கு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.