இராஜாஜி தமிழ்ப்பள்ளி அடிக்கல் நாட்டு விழாக் கண்டது

c11720e4 4bc9 4ebb b20b ff67870082ac

 

ஜார்ச்டவுன் – ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு கோயில் வளாகத்திற்கு அருகில் செயல்பட்டு வந்த இராஜாஜி தமிழ்ப்பள்ளியின் இடமாற்றமும் மறுகட்டமைப்பும், வெறும் நிர்வாக நடவடிக்கையாக மட்டுமல்ல. அது ஒற்றுமை, அரசியல் தைரியம் மற்றும் சிவில் நிர்வாகம் ஆகியவை இணைந்து நீண்டகால சமூக இலக்குகளை எவ்வாறு சாதிக்க முடியும் என்பதற்கான சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாகும் என்று முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் தெரிவித்தார்.

img 20260124 wa0017
புதிய இராஜாஜி தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் சாவ் கோன் இயோவ், 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் நிலத்தில் இயங்கி வந்த அந்தப் பள்ளியின் பயணம், நிரந்தர இடம் வழங்கப்படும் வரை ஒத்துழைப்பு, பொறுமை மற்றும் புத்தாக்கமான கொள்கை வகுத்தல் மூலம் சிக்கலான அடிமட்டப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான மாநில அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.

“இந்த முன்முயற்சி திட்டம் எளிதானது அல்ல. ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்புகளையும் தடைகளையும் நாங்கள் எதிர்கொண்டோம், ஆனால், தேசிய ஒற்றுமையின் உணர்வின் கீழ் அமைதியான ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு மூலம், ஒவ்வொரு சவாலையும் நாங்கள் சமாளிக்க முடிந்தது,” என்று அவர் கூறினார்.

 

2.368 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ள இந்தப் புதிய பள்ளி, மொத்தம் 33,225 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடத்தைக் கொண்டிருக்கும். இதில் 12 வகுப்பறைகள் மற்றும் திறந்தவெளி மண்டபம், உணவகம், தலைமையாசிரியர் அலுவலகம், நிர்வாக அலுவலகம், நூலகம், சூராவ், பணியாளர் அறை மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் கொண்டிருக்கும்.

 

தமிழ்ப்பள்ளிகள் பொதுவாக பகுதி உதவி பெறும் பள்ளிகளாகும். அவை அவற்றின் சொந்த கட்டுமான நிதியைத் திரட்டுவதற்குப் பொறுப்பானவை என்றாலும், பினாங்கு அரசாங்கம் இந்தத் திட்டம் தாமதமின்றி தொடரப்படுவதை உறுதிசெய்ய ஓர் ஆக்கப்பூர்வமான மற்றும் நடைமுறை அணுகுமுறையை ஏற்றுக்கொண்டது என்று சாவ் விளக்கமளித்தார்.

“மாநில அளவில் மிக உயர்ந்த கொள்கை வகுக்கும் அமைப்பாக, மாநில நிர்வாகக் குழு, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க ஆக்கப்பூர்வமாகவும் புதுமையாகவும் சிந்திக்க வேண்டும்.

“இந்த விஷயத்தில், அங்கீகரிக்கப்பட்ட நகர திட்டமிடல் நிபந்தனைகளுக்கு இணங்க, பள்ளியை முழுமையாக நிதியளித்து கட்டுவதற்காக ஐடியல் சொத்துடைமை குழுமத்தின் ஒத்துழைப்பை நாங்கள் வெற்றிகரமாகப் பெற்றுள்ளோம் என்று அவர் கூறினார்.

 

அனுமதிகளை எளிதாக்கி, திட்டம் சுமூகமாக தொடங்குவதை உறுதி செய்ததற்காக ஐடியல் சொத்துடைமை குழுமம், பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி), கல்வி அதிகாரிகள், இந்து அறப்பணி வாரியம், அரசு சாரா நிறுவனங்கள் (NGO) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அவர் நன்றித் தெரிவித்தார்.

 

“கல்வி மேம்பாடு அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், அனைத்து கல்விப் பிரிவுகளும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நியாயமான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்வதற்கான நமது அரசியலமைப்பு பொறுப்பை இது பிரதிபலிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

 

பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழுவின் தலைவரும், மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு, தமிழ்ப் பள்ளிகளுக்காக ஆண்டுதோறும் ரிம2.42 மில்லியன் ஒதுக்குவதாக அறிவித்தார்.

 

“மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பினாங்கு தமிழ்ப் பள்ளி சேர்க்கை விகிதத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிதியுதவி மூலம், நமது பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை வலுப்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

 

வரலாற்று சவால்களை எடுத்துரைத்த சுந்தராஜூ, பினாங்கில் உள்ள கிட்டத்தட்ட 70% தமிழ்ப்பள்ளிகள் தோட்டங்களிலிருந்து தோன்றியவை என்றும், அவற்றில் பல இப்போது முன்னாள் தோட்டம் அல்லது மூன்றாம் தரப்பு நிலங்களில் அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

 

தமிழ்ப்பள்ளிகளுக்கு நிரந்தர நில உரிமையைப் பெறுவது எங்கள் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.

 

கடந்த இரண்டரை ஆண்டுகளில், நான்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலப் பிரச்சனைகளை நாங்கள் வெற்றிகரமாகத் தீர்த்துள்ளோம் என்று அவர் கூறினார்.

கூடுதலாக, இந்த ஆண்டு பினாங்கு முழுவதும் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் பிரார்த்தனை அறைகளை நிறுவுவதற்கும், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தலைமைத்துவம் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் ஏற்று நடத்தவும், சுந்தராஜூ ரிம10,000 ஒதுக்கீட்டை அறிவித்தார்.

இதற்கிடையில், புக்கிட் குலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங், புதிய ராஜாஜி தமிழ்ப்பள்ளி இத்தொகுதியின் பல இன அடையாளத்தின் சின்னமாக விவரித்தார்.

இதுவே புக்கிட் குளுகோர் நகரத்தின் உணர்வாகும். ஒரு சீனப் பள்ளி, ஒரு முஸ்லிம் மதப் பள்ளி, மேலும் விரைவில் ஒரு தமிழ்ப் பள்ளி ஆகியவை பரஸ்பர மரியாதையுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

 

ஐடியல் சொத்துடைமை குழுமத்திற்கு நன்றி தெரிவித்த ராம்கர்பால், புதிய பள்ளி ரிம20 மில்லியன் மதிப்புள்ள நிலத்தில், இரண்டு ஆண்டுகள் திட்டமிடப்பட்ட கட்டுமான காலத்துடன் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

“இந்த புதிய பள்ளி 250–300 மாணவர்களை உள்ளடக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

கட்டுமானப் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், துணிச்சலான ஆனால் அவசியமான வளர்ச்சி முடிவுகளை தொடர்ந்து ஆதரிக்குமாறு பினாங்கு வாழ் மக்களிடம் சாவ் கோரிக்கை விடுத்தார்.

ஒற்றுமை இன்றி சவாலான திட்டங்களை செயல்படுத்துவது தலைவர்களுக்கு கடினமானதாக இருக்கும். ஆனால் துணிச்சலான கொள்கைகள் விளைவுகளை வழங்கும் போது, மக்கள் இறுதியில் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

 

அரசு, தனியார் துறை மற்றும் சமூகம் இணைந்து பணியாற்றும்போது, ஒரு பள்ளியைக் கட்டுவதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு புதிய இராஜாஜி தமிழ்ப்பள்ளி ஒரு சான்றாக திகழ்கின்றது என்று அவர் மேலும் கூறினார்