டத்தோ கெராமாட் – பினாங்கு மாநில அரசாங்கம், இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதுடன் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரிம50,000 மானியத்தை வழங்கியுள்ளது.
பள்ளி உள்கட்டமைப்பின் தரத்தை உயர்த்தி, அங்கு கல்விப் பயிலும் 339 மாணவர்களுக்கும் சமமான மற்றும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

“மாநில அரசு எப்போதும் முழுமையான, உள்ளடக்கிய மற்றும் தரமான கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உறுதியாக ஆதரவு வழங்கி வருகிறது. அதில், தாய்மொழிப் பள்ளிகள் காலத்திற்கேற்றவையாகவும் போட்டித்தன்மையுடனும் விளங்க தேவையான அதிகாரமளிப்பும் அடங்குகிறது.

“இந்தப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்காக இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி வங்கி கணக்கிற்கு ரிம50,000 நன்கொடையாக வழங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர், இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் வாசுகி தேவி அறிவானந்தம், பினாங்கு மாநில கல்வித் துறை (JPNPP) அதிகாரிகள், பள்ளி நிர்வாகக் குழு (LPS) உறுப்பினர்கள் மற்றும் இராமகிருஷ்ண பெற்றோர் ஆசிரியர் சங்க (PIBG) பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கொன் இயோவ், பள்ளியில் மாணவர்களின் சிறப்பை மேம்படுத்துவதற்காக இராமகிருஷ்ண தமிழ்ப்பளிக்கு கூடுதலாக ரிம30,000 மானியம் வழங்குவதாக அறிவித்தார்.
“இந்தப் பங்களிப்பு பெரியதாக இல்லாவிட்டாலும், கடந்த 15 அல்லது 16 ஆண்டுகளில், வழங்கப்பட்ட பங்களிப்பு இந்தப் பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.

“கல்வியின் மீதான அரசாங்கத்தின் அக்கறையின் வழி வழங்கப்படும் பங்களிப்புகள் மூலம், மாணவர்களும் கல்வியாளர்களும் சிறந்த கற்றல் கற்பித்தல் சூழலை அனுபவிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல்தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கூறினார்.
அதே நேரத்தில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி நிர்வாகத்தின் முயற்சிகளையும் கொன் இயோவ் பாராட்டினார்.

மலேசியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், இத்தகைய கொண்டாட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இனங்களுக்கிடையே புரிதல், சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்தும் மேடையாக விளங்குகின்றன.
“உண்மையில், இன்றைய நிகழ்ச்சியைப் பொருத்தவரை, இந்தக் கொண்டாட்டம் பள்ளி சூழலை மேலும் பிரகாசமாக்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளி, பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு இடையிலான உறவுகளை உறுதிப்படுத்தி, வலுவான தேசிய ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும் பங்களிக்கிறது.”
“இன்றைய இக்கொண்டாட்டத்தின் மூலம், பள்ளி மாணவர்கள் சிறு வயதிலிருந்தே பொங்கல் விழாவின் அர்த்தத்தையும் பாரம்பரியத்தையும் அறிந்து, அதனை அனுபவித்து பின்பற்றும் வாய்ப்பைப் பெறுகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
“நமது பண்பாடு நமது அடையாளத்தை உருவாக்குகிறது; அதுவே நமது பொறுப்புகளையும் வழிநடத்துகிறது.
“பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒன்றுபட்ட மதிப்புகளுடன் மலேசியாவையும், நம்மையும், எதிர்கால தலைமுறையையும் வளர்த்தெடுப்பதே எங்கள் ஒரே குறிக்கோளாகும்.
இதற்கிடையில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மட்டுமின்றி, பினாங்கு மாநில அரசு மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில், குறிப்பாக டத்தோ கெராமாட் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு வகையான உதவிகளை வழங்கி வந்துள்ளது என்று இராயர் தெரிவித்தார்.
“மாணவர்கள் பள்ளிப் பருவத்தில் வசதியான கற்றல் கற்பித்தல் சூழ்நிலையில் கல்வியைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும், மாநில அரசு எதிர்காலத்தில் இந்த முயற்சியைத் தொடரும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
மாநில அரசாங்கத்தின் இந்தப் பங்களிப்பு, பள்ளிக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த அர்த்தமுள்ள ஆதரவாக அமைந்துள்ளதாக தலைமையாசிரியர் வாசுகி தேவி தெரிவித்தார்.
“மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த இந்த ஒதுக்கீட்டை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்துவோம்,” என்று அவர் கூறினார்.