உலகளாவிய வணிக சேவை மையம் – ஒன் மசுரி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவுப்பெறும் .

பாயான் பாரு – ” பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் (பி.டி.சி) மேற்பார்வையின் கீழ் நிர்மாணித்து வரும் உலகளாவிய வணிக சேவை மையம் – ஒன் மசுரி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குக்குள் நிறைவடையும் என நம்பிக்கைக் கொள்வதாக   பி.டி.சி தலைவர் டத்தோ முகமது பசிட் கூறினார். தற்போது இந்த சேவை மையம் குறிக்கப்பட்டுள்ள காலவரையைப் பின்பற்றி நிர்மாணிக்கப்பட்டு வருவதாக பி.டி.சி ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அண்மையில் பி.டி.சி கழகம் 50-வது வருட நிறைவு விழாவை அடைந்ததற்கு அதன் ஊழியர்களின் பங்களிப்பு அளப்பரியது. இக்கழக புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்ற டத்தோ முகமது பசிட் தலைமைத்துவத்தின் கீழ் இம்மாநிலத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் துரித வளர்ச்சி கண்டு சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு தெரிவித்தார்.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழா குத்து விளக்கேற்றி, பறவைகளைக் கூண்டிலிருந்து சுதந்திரமாக வெளியேற்றி அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்டது. 

பி.டி.சி கழகத்தின் கீழ் இதுவரை பல  மேம்பாட்டுத் திட்டங்கள் வெற்றிகரமாகப் பூர்த்தி அடைந்த வேளையில் தற்போது பல திட்டங்களும் மேம்பாடுக் கண்டு வருகிறது. மாநில அரசு பி.டி.சி கழகத்தின் அடைவுநிலை, அர்ப்பணிப்பு, கடமையுணர்வைக் கண்டு பெருமைக்கொள்வதாக முதல்வர் கூறினார்.

இந்நிகழ்வில் இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, பி.டி.சி கழகத்தின் இந்து சங்க சங்கத் தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் பி.டி.சி கழகத்தின் சக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பி.டி.சி கழக இந்து சங்க கூட்டமைப்பு சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பி40 குழுவைச் சேர்ந்த மூன்று குடும்பங்களுக்கு முறையே ரிம1,000 ரொக்கபணம்; மாக் மண்டி தமிழ்ப்பள்ளி மண்டபம் நிர்மாணிப்பு நிதிக்கு ரிம1,000 (ரொக்கம்) மற்றும் எவர்சாய்ன் முதியோர் இல்லத்திற்கு ரிம1,000 மதிக்கத்தக்க இரு “heater” வழங்கப்பட்டது.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட விருந்தினர்கள் இந்திய பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்ந்ததோடு  கண்ணுக்கு விருந்தான பாரம்பரிய நடனத்தையும் கண்டு களித்தனர்