உலக அரங்கில் பினாங்கு முத்திரை பதிக்கும்

‘ஸ்பைஸ்’  என்றழைக்கப்படும் பினாங்கு அனைத்துலக மாநாட்டு மற்றும் கண்காட்சி மையம் ‘Subterranean Penang International Convention and Exhibition-SPICE’ பசிபிக் ஆசியாவின் முதல் நிலத்தடி மாநாட்டு மையமாக விளங்கப் போகிறது. ரிம 250 மில்லியன் பொருட்செலவில் எஸ் பி செத்தியா “SP Setia Bhd Group’ நிறுவனத்தின் கீஅச் செயற்பட்டுவரும்  இதன் மேம்பாட்டுப் பணிகள் இதுவரை 19% நிறைவடைந்துவிட்ட வேளையில் இதன்  முழு நிர்மாணிப்புப் பணி 2016-இல் நிறைவடையும் என அதன் உயர் தள மேற்பார்வையாளர் ஆலன் யோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

‘ஸ்பைஸ்’ மேம்பாட்டுப் பணிகள் நிலை 1, நிலை 2(அ) 2(ஆ), நிலை 3(அ) 3(ஆ) என மூன்று நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என திரு ஆலன் யோ விளக்கமளித்தார். முதல் நிலையானது தற்போதுள்ள பினாங்கு அனைத்துலக விளையாட்டரங்கைத் தர மேம்படுத்துவதாகும். இரண்டாம் நிலையானது பொருள் விற்பனைக் கடைகளும் அலுவலகங்களும் அமைப்பதாகும். அதோடு, ஏற்கனவே உள்ள நீச்சள் மையத்தை மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றார். மூன்றாம் நிலையானது, நிலத்தடி மாநாட்டு மற்றும் கண்காட்சி மையக் கட்டுமானப் பணியாகும். இந்த மூன்று நிலைகளிலும் மேம்பாட்டு பணிகள் துரித வளர்ச்சியடைந்து வருகிறது எனவும் கூறினார்.

2009-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த திட்டத்திற்குத் தொடக்கத்தில் பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகளும் எதிர்கட்சியிடமிருந்து பல குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த உலகத் தரம் வாய்ந்த இத்திட்டத்திற்குத் தற்போது பினாங்கு வாழ் மக்களிடமிருந்தும் பினாங்கு பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும் அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது என உயர் தள மேற்பார்வையாளர் திரு ஆலன் யொ மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த ‘ஸ்பைஸ்’ திட்டம் நிச்சயம் பினாங்கை அனைத்துலக அறிவார்ந்த நகரமாக உலக அரங்கில் முத்திரை பதிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.