‘எக்ஸாபைட்ஸ்’ நிறுவனத்துடன் பெண்களுக்கான தொழில்முனைவர் திட்டம் அறிமுகம் கண்டது

Admin

ஜார்ச்டவுன்- பினாங்கு மாநில அரசு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி கிளாவுட், இ-
வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் வழங்குநரான ‘எக்ஸாபைட்ஸ்’ (Exabytes) நிறுவனம் 2021 அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு எக்ஸாபைட்ஸ் பெண்கள் தொழில்முனைவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

‘பெண்களே நம்மால் முடியும்’ என்ற கருப்பொருளுடன், இத்திட்டத்தில் பெண்களின் திறன்களை முன்னிலைப்படுத்தி  மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த  பெண் தொழில்முனைவருக்கு அவர்களின் வணிகத் திட்டங்களை செயல்படுத்த ஒரு சிறந்த தளமாக இது விளங்கும். 

சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினருமான  சொங் எங், இத்திட்டத்தின் மூலம்  தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பெண் தொழில்முனைவருக்கு இலவச வலைத்தளம் அல்லது ஆன்லைன் ஸ்டோர் அமைப்பிற்கு வழிவகுக்கப்படும், என்றார்.

“இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவருக்கு தங்கள் வணிகங்களுக்கான ஆன்லைன் தளத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் விற்பனைப் பற்றிய தகவல்கள் பரந்த நிலையில்  வாடிக்கையாளர்களைச் சென்றடைய உதவிக்கரம் நீட்டப்படும்.

“இந்த திட்டத்தை செயல்படுத்த  தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வடிவத்தில் எக்ஸாபைட்ஸ் நிறுவனம் ஏறக்குறைய ரிம350,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. 

“தொழில்முனைவர் வலைத்தளத்தை தங்கள் சொந்த பிராண்ட் அடையாளம் கொண்டு உருவாக்க முடியும்; இது ஒரு வணிகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அங்கம் மற்றும் இலக்கு வாடிக்கையாளர்களை சென்றடைய உதவுகிறது,” என்று ஜூம் வழியாக இத்திட்டத்தின் மெய்நிகர் அறிமுக விழாவின்  போது அவர் இவ்வாறு கூறினார்.

இ-வர்த்தக தொழில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் வளர்ச்சியடைந்து வருவதால், பெண்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி தொடர்ந்து  ஆன்லைன் தொழில் தொடங்குவதற்கான அவர்களின் கனவுகளை நிறைவேற்ற இத்திட்டம்  வாய்ப்பளிக்கிறது என்றும் சொங் எங் மேலும் கூறினார்.

“டிஜிட்டல்மயமாக்கல் என்பது முன்னோக்கி செல்லும் வழியாகும். எனவே, பெண்கள் பின்வாங்காமல் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் நிபுணத்துவ பங்களிப்பை தொடர்ந்து வழங்க இணக்கம் கொள்ள  வேண்டும்,” என்று மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியின்  அறிமுக விழாவின் போது எக்ஸாபைட்ஸ் மூத்த துணைத் தலைவர் விக்சன் டான் மற்றும் மூத்த வணிக மேம்பாட்டு மேலாளர் ஓய் போ யான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தில் பதிவுச்செய்ய மலேசியா அல்லது சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வணிகத்தைக் கொண்டிருக்கும்  பெண் தொழில்முனைவருக்கும் இந்த மாத முழுவதும் பங்கேற்க வாய்ப்பு நல்கப்படும். 

பங்கேற்பாளர்கள்  மார்ச்,31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்த கூடுதல் தகவலுக்கு, https://www.exabytes.my/women-entrepreneurship-ஐ பார்வையிடவும்.